கடலூர் ரேஷன் கடை ஊழியர்களின் வேலை.. விருத்தாசலம் வயலில் இருந்த ரகசியம்.. சிக்கியது எப்படி?
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தில் உள்ள ஒருவரது வயலில் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தில் குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில் போலீசார் சென்றனர். அங்கு பதுக்கி வைத்திருந்த 510 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்கள் 2 பேரை கைது செய்தனர்.
தேசிய அளவில் தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கடையில் தங்களுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை என்றால், முறைகேடு செய்தால் எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்க முடியும்.

அத்துடன் தவறு இழைத்த ரேஷன் கடை பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரேஷனில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்கள் உள்ளனர். ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரமும் உள்ளது.
ரேஷன் அரிசி, ரேஷன் மண்எண்ணெய் கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் தமிழ்நாடு அளவில் இயங்கி வருகிறது. இதற்கு கீழ் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியிருக்கிறார்கள். மேலும் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் உள்ளனர். அவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தில் உள்ள ஒருவரது வயலில் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில் ஏட்டு ராஜசேகர், போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் விரைந்து சென்று குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு 4 பேரல்களில் 510 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த மண்எண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை அவர்கள் கடலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பயர் கிராமத்தை சேர்ந்த குருசேவ் மகன் செந்தில்குமார் (வயது 35), பழனிசாமி மகன் கணேசன் (30) ஆகியோர் வயலில் மண்எண்ணெய்யை பதுக்கி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் செந்தில்குமார் அகரம், நிதிநத்தம் ஆகிய ஊர்களில் செயல்படும் ரேஷன் கடைகளிலும், கணேசன் சாத்தியம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையிலும் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படும் மண்எண்ணெய்யை கடத்தி வந்து வயலில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications