கடலூரை கதிகலங்க வைத்த விபத்து..காற்றோடு கலந்த 3 உயிர்கள்! ரயில்வே மீது புகார்.. விசாரணை குழு அமைப்பு
கடலூர்: கடலூரில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் சார்பில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் விசாரணை தலைமை அதிகாரியாக கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் தனியார் பள்ளி வேன் நேற்று (ஜூலை 8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது.
அப்போது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. ரயில் மோதியபோது பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்து சுமார் 50 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது.

இந்த விபத்தில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் , சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் , தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ், வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு காரணம் ரயில்வே கேட்டில் பணியாற்றி வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் பங்கத் சர்மா என்றும் அவரது அலட்சியம் காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ள நிலையில், விபத்து ரயில்வே ஊழியரின் அலட்சியம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் சார்பில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ்குமார் தலைமையில், 3 பேர் கொண்ட இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், விபத்து தொடர்பாக பணியில் இருந்த கேட்கீப்பர், ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், மற்றும் ரயில் மேலாளர், ஆலம்பாக்கம் ரயில் நிலைய 2மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய ஒரு மேலாளர் மேசம், கடலூர் இருப்புபாதை பகுதியில் பணியாற்றும் இரண்டு பொறியாளர்கள் ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த முதன்மை லோக்கோ ஆய்வாளர்கள், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் உட்பட 13 நபர்களை நேரில் விசாரணைக்கு நேரில் வருமாறு ரயில்வே நிர்வாகத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணையின் போது தேவை ஏற்பட்டால் விபத்து தொடர்பாக மேலும் சில நபர்களை விசாரணைக்காக அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும், விபத்து தொடர்பாக தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், 3பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களையும் தனியாக விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்று திருச்சி தென்னக ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகத்திற்கு அழைப்பு டுவிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக யாரும் ஆஜராகவில்லை. விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும் இந்த விசாரணை குழு கடலூர் ரயில் விபத்து எப்படி நடந்தது? எந்த இடத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது? என்பது தொடர்பான விசாரணையை செய்து முழு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications