EXCLUSIVE: ஆம்புலன்ஸில்கூட ஏறவிடலயே.. கதறிய தலித் இளைஞர்கள்.. மேல்மணக்குடியில் என்னதான் நடந்தது?
கடலூரில் இரு தரப்பினருக்கிடையேயான மோதலில் தலித் இளைஞர்கள் படுகாயமடைந்துள்னர்
கடலூர்: கடலூர் அருகே காயங்களுடன் ஆம்புலன்ஸில் அழைத்துச்செல்லப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை மற்றொரு சமூகத்தினர் கூட்டாக சேர்ந்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசல் புரசலாக செய்திகள் வெளியான நிலையில், கடலூர் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முண்ணி நிர்வாகிகள் இதில் தலையிட்டுள்ளனர். இதன் மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதனை தொடர்பு கொண்டு பேசியபோது சில விஷயங்கள் தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, "கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்காவின் சாத்தப்பாடி கிராமத்தில் பரவலாக தலித் சமூக மக்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று மாசிமகத்தையொட்டி இந்த பகுதியில் அமைந்துள்ள கோயிலில் விழா நடைபெற்றுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த சாமி டிராக்டரில் பிச்சாவரம் வரை கொண்டு செல்லப்பட்டு வாழிபாடு செய்யப்பட்டு திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த டிராக்டரில் வந்த தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை ஒலிபரப்பியவாறு வந்துள்ளனர். அப்போது மேலமணக்குடி கிராமத்திலிருந்த வேறு சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் இவர்களை வழிமறித்து இப்பாடலை ஒலிக்க விட கூடாது என்று கூறியுள்ளனர்.

தாக்குதல்
இதுதான் இந்த ஒட்டுமொத்த சம்பவத்திற்கும் தொடக்கப்புள்ளி. ஆனால் தலித் இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பாடலை கேட்பதில் உறுதியாக இருந்திருக்கின்றனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு உருவாகியிருக்கிறது. இது சூடுபிடித்து ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக உருவாகியிருக்கிறது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகள் காயத்துடன் இருப்பதை அறிந்த தலித் இளைஞர்களுடன் வந்த பெற்றோர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்சும் 20 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. ஆனால், இதற்கிடையில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் உள்ள தங்கள் சமூகத்தை சேர்ந்த மற்ற இளைஞர்களையும் அழைத்திருக்கின்றனர். இவ்வாறு திரண்ட இளைஞர்கள் ஆம்புலன்ஸில் காயங்களுடன் ஏறிய தலித் இளைஞரையும், அவருடைய பெற்றோரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மட்டுமல்லாது ஆம்புலன்சில் இருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதில் தலித் இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள்தான் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. இப்படியாகதான் விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது.
|
வீடியோ
தலித் இளைஞர்கள் ஆம்புலன்சில் இருந்து வெளியில் இழுத்து வரப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்ததால் பயந்த தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அவர்களை புவனகிரி பொது மருத்துவமனைக்கு வெளியே வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிக்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜ முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 5 தலித் இளைஞர்களும், வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இதில் தலித் இளைஞர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக புவனகிரி காவல்துறையினர் வேறு சமூகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் மீதும், தலித் சமூகத்தை ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்காமல் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கும்பல் தாக்குதல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி விரைவில் போராட்டம் நடத்தும்" என்று கூறியுள்ளார். தற்போது இது தொடர்பாக வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications