கேட் கீப்பர் தூங்கிவிட்டாரா? கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! நேரில் பார்த்தவர் தகவல்
கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து கேட்கீப்பர் தூங்கியதால் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, ரயில் வரும் நேரத்தில் கேட்கீப்பர் கேட்டை மூடாததால், அந்த வேன், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த தகவலை ரயில்வே துறை மறுத்துள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காவல்துறைக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்குத் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பள்ளி வேனில் குறைந்த அளவே மாணவர்கள் இருந்ததால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, கேட்கீப்பரின் அலட்சியம்தான். பொதுவாக ரயில் தண்டவாளங்களைக் கடந்து ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லும் நிலை உள்ளது. ரயில் வருவது தெரிந்தவுடன் அங்கிருக்கும் கேட்கீப்பர் ரயில்வே கேட்டை மூடுவார்.
இதனால் இருபுறமும் செல்லும் நபர்கள் சில நிமிடங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோர் போன்றோர் கேட் பகுதியின் அடியில் இருக்கும் இடைவெளி வழியாக ஆபத்தான முறையில் கடப்பார்கள்.
இந்த நிலையில், இந்த பகுதிக்கு கேட் இருந்தும், அதை மூட வேண்டிய கேட்கீப்பர் தூங்கிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். மேலும் கேட் கீப்பர் வடமாநிலத்தவர் என்பதால் நம் மாநிலத்தில் காலையில் என்ன நடக்கிறது என்பதுகுறித்த சூழல் அவருக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கேட் திறந்திருந்ததால், ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரயில் மோதியதில் பள்ளி வேன் உருக்குலைந்து போனது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையும் ரயில்வே துறையும் விசாரித்து வருகின்றன.
இந்த விபத்தில் கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார். மேலும் நிவாஸ் (12), சாருமதி (16) ஆகிய மாணவர்களும் பலியாகிவிட்டனர். வேனில் மொத்தம் 5 மாணவர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அவர்கள் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் காயமடைந்த செழியன், விஷ்வாஸ், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் ஆகிய 3 பேருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செழியனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார். சாருமதியும் செழியன் அக்கா தம்பி என கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்சி, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர்கள் விரைந்துள்ளனர்.
அது போல் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் ஆகியோரும் சென்றுள்ளனர். அது போல் சம்பவ இடத்தில் போலீஸாரும் தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்தால் ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் அந்த வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
காலையில் அனைவரும் பரபரப்பாக வேலை, பள்ளிக்குச் செல்லும் நிலையில் ரயில்வே கேட்டை பொறுப்பாக மூடாமல் தூங்கிக் கொண்டிருந்ததால் விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த கேட் கீப்பரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பிறகு காவல் துறையினர் அவரை மீட்டனர். ஆனால் ரயில்வே துறை அளித்த விளக்கத்தில் கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்த போது வேன் டிரைவர்தான் திறக்க சொன்னதாக சொல்லியிருக்கிறார்கள். எனவே இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்தால் மட்டுமே எதுவும் தெரியும்.












Click it and Unblock the Notifications