12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம்- எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
டெல்லி: ராஜ்யசபாவில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த 5 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசிநாளில் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த அமளியில் ஈடுபட்ட 12 ராஜ்யசபா எம்.பிக்கள், நடப்பு குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றம் முடக்கம்
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 12 எம்.பிக்கள். ராஜ்யசபா தலைவரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு சபைகளின் நடவடிக்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ., சிவசேனா கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் அனுப்பி இருந்தார். இன்று காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வலியுறுத்தல்
ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ சில கட்சித் தலைவர்களை மட்டுமே ஆலோசனை நடத்த அழைத்திருப்பது ஏற்புடையது அல்ல. மத்திய அரசின் இந்த செயல் நியாயமற்றது- துரதிருஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷிக்கு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அத்துடன் இன்று காலை அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டினார் மல்லிகார்ஜூன கார்கே.

மத்திய அரசின் ஸ்டண்ட் தோல்வி
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரைன் தமது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு இன்று காலை ஸ்டண்ட் தொடங்கி இருக்கிறது. இது தோல்வி அடைந்துவிட்ட ஒரு ஸ்டண்ட். 12 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சில கட்சிகளின் தலைவர்களை மட்டும் ஆலோசனைக்கு அழைத்திருக்கிறது மத்திய அரசு. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.. முதலில் சஸ்பெண்ட் உத்தரவை நீக்குங்கள் என்பதுதான் எங்களது ஒற்றை கோரிக்கை எனவும் பதிவிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
இந்நிலையில் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் கூட்டாகப் புறக்கணித்துள்ளன. 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications