நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. 3 நாட்களில் 24 எம்.பி-க்கள் சஸ்பெண்ட்.. என்ன காரணம்?
டெல்லி: கடந்த 3 நாட்களில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 24 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியது. கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு
அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைந்து அவை திரும்பிய பின் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.

முதல் நாள்
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் லோக் சபாவில் அவைத் தலைவர் ஓம் பிர்லா இருக்கை முன் நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் லோக் சபா உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இரண்டாம் நாள்
அதேபோல் நேற்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி ராஜ்ய சபாவில் போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 19 பேர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடரும் இடைநீக்கம்
இந்த நிலையில் ராஜ்ய சபாவின் நேற்றைய கூட்டத்தின் போது காகிதங்களை கிழித்து அவைத் தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் லோக் சபாவில் 4 எம்.பி-க்கள், ராஜ்ய சபாவில் 20 எம்.பி-க்கள் என மொத்தமாக 24 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி எம்.பி-க்களை இடைநீக்கம் செய்வதன் மூலம் பாஜக விவாதம் நடத்த அச்சப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications