இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
டெல்லி: தற்போது வெளியாகி உள்ள யுவிஎஸ்சி தேர்வில் பெண்களின் தேர்ச்சி சதவீதமும், முஸ்லிம்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது. மொத்தம் 1016 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைந்த நிலையில் எந்தெந்த பிரிவை சேர்ந்தவர் எவ்வளவு சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர் என்பத பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர்பதவிகளை பெற வேண்டும் என்றால் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் மட்டுமே அத்தகைய பொறுப்புகளில் நியமனம் செய்யப்படுவார்கள்.

யுவிஎஸ்சி தேர்வு என்பது மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு நடந்தது.
2023 மே மாதம் 28ம் தேதி முதல்நிலை தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி 5 நாட்கள் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்க்காணல் என்பது கடந்த ஜனவரி 4 முதல் 9 வரை நடந்தது. இந்நிலையில் தான் யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது.
இதில் மொத்தம் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 664 பேர் ஆண்கள். 353 பேர் பெண்கள் ஆவார்கள். முதல் 4 இடங்களை ஆண்கள் பிடித்தனர். அதன்படி அகில இந்திய அளவில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்தார். 2 இடத்தை அனிமேஷ் பிரதான், 3வது இடத்தை டோனூரு அனன்யா ரெட்டி, 4வது இடத்தை பி கே சித்தார்த் ராம்குமார் பிடித்தனர். அதன்பிறகு 5 வது இடம் முதல் 10வது இடத்தில் பெண்கள் உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரசாந்த் என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவர் தேசிய அளவில் 78 வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் தான் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் மற்றும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பாக பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது வழக்கத்தை விட யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை சமுதாயமாக கூறப்படும் பிரிவை சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சமூகத்தில் மாற்றம் ஏற்படுவதை காட்டும் வகையில் உள்ளது.
அதாவது பொதுவாக யுபிஎஸ்சி தேர்வுகளில் சிறுபான்மை சமூகமாக அறியப்படும் முஸ்லிம்களின் தேர்ச்சி என்பது குறைவாக இருக்கும். இது அவ்வப்போது சர்ச்சையாகும். அதாவது இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைவதற்கான கல்வி அவர்களுக்கு கிடைக்கவில்லையா? அவர்களின் கல்விக்கு எது தடையாக இருக்கிறது? என்பது தொடர்பான பல கேள்விகள் எழும். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம் மாணவர்களின் தேர்ச்சி என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்த வெளியான ரிசல்ட்டில் தேர்ச்சியடைந்தவர்களில் 51 பேர் முஸ்லிம்களாக உள்ளன. இது உண்மையில் ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உயர் பதவிகளில் அனைத்து சாதி, மதங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றும்போது ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை உருவாகும் என்பதால் இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தியாகும்.
அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண்களின் தேர்ச்சி. அதாவது யுபிஎஸ்சி தேர்வில் இந்த முறை 3ல் ஒரு பங்கு பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது மொத்தம் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அதில் 352 பேர் பெண்கள் ஆவார்கள். அதிலும் டாப் 10ல் 6 பேர் பெண்களாக உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு யுபிஎஸ்சி தேர்வில் பெண்களின் தேர்ச்சி சதவீதம் என்பது சுமார் 20 என்ற அளவில் மட்டுமே இருந்தது.
ஆனால் இந்த முறை பெண்களின் தேர்ச்சி சதவீதம் என்பது 34.65 என்ற அளவில் உள்ளது. மேலும் இஸ்லாமிய பெண்களின் தேர்ச்சி சதவீதமும் இன்னொரு சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக பார்த்தால் நவ்ஷீன் என்பவர் இந்திய அளவில் 9 வது இடத்தை பிடித்துள்ளார். வர்தா கான் என்பவர் 18 வது இடத்தையும், ஜுபிஷன் ஹக் 34 வது இடத்தையும் , ஃபபி ரஷீத் 71வது இடத்தையும், அர்ஃபா உஸ்மானி 111வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர இன்னும் சிலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் தற்போதைய ரிசல்ட் படி பார்த்தால் பொது பிரிவை சேர்ந்த 347 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில்115 பேர், ஓபிசி பிரிவில் 303 பேர், எஸ்சி பிரிவில் 165 பேர், எஸ்டி பிரிவில் 86 பேர் என மொத்தம் 1016 பேர் வெற்றியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications