தமிழ்நாட்டில் 74 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: மத்திய அரசு
டெல்லி: தமிழ்நாட்டில் 74 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங், ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் டூடு ஆகியோர் அளித்த பதில்கள்:

நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்காக நீர்வள இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. நாள்தோறும் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும், தலா ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். குஜராத், தெலங்கானா, ஹரியானா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாதர் நாகர் ஹவேலி, டாமன்-டையு ஆகிய பகுதிகளில் 100 சதவீதம் அளவுக்கு பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான 3.60 லட்சம் கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்காக 2.08 லட்சம் கோடி ரூபாய் இருக்கும்.
ஜனவரி 31, 2023 வரை தமிழ்நாட்டில் உள்ள 125.51 லட்சம் கிராமப்புற வீடுகளில் 74.03 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் குழாய் இணைப்பு மூலம் குடிநீரைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, 2019 ஆகஸ்ட் முதல், ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
ஜல் ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புறக் குடும்பங்கள் குழாய் இணைப்புகளை பெற்றிருந்தன. இதுவரை, 7.81 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 30.01.2023 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புறக் குடும்பங்களில், சுமார் 11.05 கோடி (57%) குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் இணைப்பு வசதி பெற்றுள்ளன.
ஜல்ஜீவன் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. மாநாடுகள், பயிலரங்குகள், காணொலி மாநாடுகள், மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்துடன் ஒழுங்குமுறைக் குழுக்களின் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மாநிலங்கள் திட்டமிட்டு இலக்கை அடைய அறிவுறுத்தப்படுகின்றன.
ஜல்ஜீவன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆன்லைன் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு , தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, ஊராட்சி அளவில் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் பொதுத்தளத்தில் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் நிதி மேலாண்மைக்கான பொது நிதி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் நீர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதாரம் தொடர்பாக பல்வேறு செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்கின்றது. மக்கள் பங்களிப்பு மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக மழைநீர் சேகரிப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டில் 'ஜல் சக்தி அபியான்'- மழை நீர் சேகரிப்பு பிரச்சாரத்தின் மூலம் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் ஆதார மேலாண்மை போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக நம் நாட்டில் உள்ள வறட்சியான 256 மாவட்டங்களிலுள்ள 1,592 வட்டங்களில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூன்றாவது கட்டமாக "மழையை சேகரியுங்கள் எங்கேயும் எப்போதும்" என்ற கருப்பொருளில் நம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (ஊரக மற்றும் நகர்புறங்கள்) அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சார நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications