தீ அணைக்க டெல்லி ஹைகோர்ட் நீதிபதி வீட்டுக்கு போன வீரர்களுக்கு ஷாக்! கட்டு கட்டாக பணம்.. டிரான்ஸ்பர்
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. இவர் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் திடெீரன்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது யஷ்வந்தர் வர்மா வீட்டில் இல்லை.
இருப்பினும் யஷ்வந்த் வர்மாவின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
மேலும் விவாதத்தை கிளப்பியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிற்கும் தகவல் சென்றது. இதையடுத்து உச்சநீதிமன்ற கொலிஜியம் உறுப்பினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் யஷ்வந்த் வர்மாவை டெல்லியில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் யஷ்வந்த் வர்மா முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது. இதனால் அவரை வெறுமனே பணி இடமாற்றம் செய்வது என்பது நீதித்துறையின் செயல்பாடு மீது மக்களுக்கு கேள்வியை எழுப்பலாம். எனவே விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நடந்த கொலிஜியம் ஆலோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை கொலிஜியம் எடுக்க முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக யஷ்வந்த் வர்மா இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications