சிங்கு எல்லையில் தூக்கில் தொங்கிய நிலையில்.. சடலமாக மீட்கப்பட்ட விவசாயி
டெல்லி: ஹரியானாவின் சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹரியானாவின் குண்ட்லி காவல் நிலையப் பகுதியில் உள்ள சிங்கு எல்லைக்கு அருகே புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. விவசாயிகள் போராட்ட தளத்தில் ஒரு தலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஒரு விவசாயியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவலின் பேரில் நேரில் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய குண்ட்லி காவல் நிலைய போலீசார், அந்த நபர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபதேகர் சாஹிப் அம்ரோ மாவட்டத்தில் உள்ள ரூர்க்கி கிராமத்தில் வசிக்கும் குர்ப்ரீத் சிங் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விவசாயி குர்ப்ரீத் சிங், ஜக்ஜித் சிங் தலேவால் தலைமையிலான சித்பூரின் பாரதிய கிசான் யூனியன் (BKU) பிரிவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
முதற்கட்ட தகவலின்படி, குறிப்பிட்ட நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம், மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் உள்ள ஜமுனியா கிராமத்தில் 65 வயது விவசாயி ஒருவர் தனது வயலில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த கோர் லால் லோதியின் உறவினரான கலன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மொத்தம் ரூ. 10 லட்சம் வங்கிக் கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த தனது மாமா தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என்றார். இருப்பினும், இந்த கூற்றை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துவிட்டது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அம்ரித் மீனா, லோதியின் குடும்பத்தினர், ஆரம்பத்தில், விவசாயி கடன் வாங்கியதாகக் குறிப்பிடவில்லை, இப்போது தான் இப்படி சொல்வதாக கூறினார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஹரியாணா மாநிலம் டெல்லியை ஒட்டியுள்ள சிங்கு எல்லையில் விவசாயிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தற்காலிகமாக வேளாண் சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசு சட்டத்தை இதுவரை ரத்து செய்யவில்லை. இதை காரணமாக குறிப்பிட்டு விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் வடமாநிலங்களில் இன்னும் தீவிரமாக உள்ளது. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications