பஜ்ரங் தள் பேரணி- வன்முறைகளைத் தடுக்க ஹரியானா, உபி, டெல்லி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: இந்துத்துவா அமைப்புகளான பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஆகியவை டெல்லி, நொய்டாவில் பேரணிகளை நடத்துவதால் வன்முறைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று உ.பி, ஹரியானா, டெல்லி மற்றும் மத்திய அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் பஜ்ரங் தள் அமைப்பினர் நடத்திய பேரணி மிகப் பெரும் வன்முறையாக மாறியது. ஹரியானா வன்முறை மத மோதலாகவும் வெடித்தது. நூ மாவட்டத்தைத் தொடர்ந்து டெல்லி அருகே குருகிராமில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஹரியானாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஜ்ரங் தள் அமைப்பின் முக்கிய நிர்வாகியும் 2 இஸ்லாமியர்களை எரித்து கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியான மோனு மானேசர், ஹரியானா பஜ்ரங் தள் பேரணியின் பின்னணியில் இருப்பதாலேயே வன்முறை வெடித்தது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைநகர் டெல்லி மற்றும் புறநகரான நொய்டாவிலும் பஜ்ரங் தள் மற்றும் விஹெச்பி ஆகியவை இன்று பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளன. டெல்லியில் இன்று காலையிலேயே பஜ்ரங் தள் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஹரியானாவைப் போல டெல்லியிலும் வன்முறை பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் டெல்லி, நொய்டாவில் பஜ்ரங் தள், விஹெச்பி பேரணி நடத்த தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் பேரணிகளில் வன்முறை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுகளை போலீசார் அனுமதிக்கக் கூடாது. வன்முறைகள் நிகழாமல் தடுக்க உ.பி, ஹரியானா, டெல்லி மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஹரியானா வன்முறையின் மையப்புள்ளியாக அத்தனை கரங்களும் நீள்வது தீவிர இந்துத்துவவாதியான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த பசு பாதுகாவலர் என தன்னை அழைத்துக் கொள்கிற மோனு மானேசர் நோக்கிதான். யார் இந்த மோனு மானேசர்?
மோனு மானேசர் பின்னணி: 2015-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் மாவட்ட பசுவதை தடுப்பு கண்காணிப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் மோனு மானேசர். 30வயதாகும் மோனு மானேசர் கடந்த சில மாதங்களாக வட இந்திய மாநில ஊடகங்களில் 2 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என ஊடகங்களில் எழுதப்பட்டு வந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜூனைத், நசீர் ஆகிய இருவரையும் அங்கிருந்து கடத்தி வந்து படுகொலை செய்து எரித்ததாக மோனு மானேசர் மீது உள்ளிட்ட அவரது குண்டர் படை மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி மோனு மானேசர்.












Click it and Unblock the Notifications