அன்னிய செலாவணி மோசடி வழக்கு- டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜூன்-9 வரை அமலாக்கப் பிரிவு காவல்
டெல்லி: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9-ந் தேதி வரை அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலது கரமாக செயல்படுவர் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். கடந்த சில மாதங்களாக சத்யேந்தர் ஜெயின் தொடர்பான சர்ச்சைகள் சுழன்று கொண்டிருக்கின்றன.

இதனால் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கப் பிரிவு கைது செய்யும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன்பே பொதுவெளியில் கூறியிருந்தார். அப்போது சத்யேந்தர் ஜெயின் வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்துக்கு சொந்தமான ரூ4.81 கோடி மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் எந்த நேரத்திலும் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கப் பிரிவினர் கைது செய்யக் கூடும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில்தான் எதிர்பார்த்தபடியே சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார். 2015-16-ம் ஆண்டு அரசு ஊழியராக சத்யேந்தர் ஜெயின் பணியாற்றிய போது ஹவாலா நெட்வொர்க் மூலம் போலி கம்பெனிகளின் பெயரில் சட்டவிரோதமாக பணம் பெற்றார் என்ற வழக்கின் கீழ் அவர் கைது செய்யபப்ட்டார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் கோரினர். ஆனால் நீதிபதியோ ஜூன் 9-ந் தேதி வரை சத்யேந்தர் ஜெயினை அமலாக்கப் பிரிவு விசாரிக்க அனுமதித்தார். இதனால் ஜூன் 9-ந் தேதி சத்யேந்திர ஜெயின் மீண்டும் நீதிமன்றத்தில் அமல்படுத்தப்படுவார்.












Click it and Unblock the Notifications