கல்தா தரும் டிஆர்எஸ்! மம்தா பானர்ஜிக்கு ஷாக்! பாஜக பக்கம் சாயும் முக்கியக் கட்சிகள்? என்ன நடக்கிறது?
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதா கட்சிகள் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரை சந்தித்து பேசினார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கியக் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற 13 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் தேவை ஏற்பட்டுள்ளதால், மாநில கட்சிகளுடன் ஜெபி நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் யார்?
பாஜக சார்பாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, திரெளபதி முர்மு ஆகியோரில் ஒருவர் பாஜக சார்பாக முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் தொடர் பேச்சுவார்த்தையில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று சரத் பவாரை மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசியது, குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மம்தா கூட்டத்தில் திமுக
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி விடுத்துள்ள ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன. அதேபோல் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பாக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, சிவசேனா கட்சி தரப்பில் சுபாஷ் தேசாய் மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

டிஆர்எஸ், ஆம் ஆத்மி பங்கேற்பில்லை
மம்தா பானர்ஜியின் ஆலோசனை கூட்டத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளன. அண்மையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் ஆகியோரை சந்திர சேகர் ராவ் சந்தித்தார். இந்தநிலையில், ஆம் ஆத்மி மற்றும் டிஆர்எஸ் கட்சி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தரப்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்த பின் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications