66% பள்ளிகளில் இணைய வசதி கிடையாது.. 23.04% பள்ளிகளில் கிரவுண்டு கிடையாது! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி: இந்தியாவில் உள்ள 15 லட்சம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 66% பள்ளிகளில் இணைய வசதி கிடையாது என தெரிய வந்துள்ளது.
மேலும், இதில் 55.5% பள்ளிகளில் கணினி வசதி கிடையாது என்றும் தெரிய வந்துள்ளது. கல்வி கணினிமயமாக்கப்பட வேண்டும் என்பதை கொரோனா பெருந்தொற்று நமக்கு ஏற்கெனவே உணர்த்தி இருந்தது.
ஆனாலும் கற்பித்தல் முறையில் போதிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்று இந்த ஆய்வுகள் தெரியப்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கல்வி
ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடுதான் கல்வி என்று சொல்வதுண்டு. அந்த வகையில், மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் கல்விக்கு அரசு/தனியார் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. அதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கொடுத்துள்ள தன்னார்வத் தரவுகளை அடிப்படையாக கொண்டு கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UIDSE+) சில புள்ளி விவரங்களை நேற்று(நவ.03) வெளியிட்டிருந்தது.

கணினி
அதன்படி இந்தியாவில் உள்ள 14,89,115 லட்சம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 66% பள்ளிகளில் இணைய வசதி கிடையாது என்றும் 55.5% பள்ளிகளில் கணினி வசதி கிடையாது எனவும் தெரிய வந்துள்ளது. கல்வி கணினிமயமாக்கப்பட வேண்டும் என்பதை கொரோனா பெருந்தொற்று உணர்த்தி இருந்த போதிலும் ஏன் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை என்று இந்த ஆய்வு அறிக்கையை குறிப்பிட்டு கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

நூலகம்
இந்த ஆய்வில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-2022ம் கல்வி ஆண்டை பொறுத்த அளவில், 6,82,566 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் இருந்திருக்கின்றன. அவற்றில் 5,04,989 பள்ளிகளில் இணைய இணைப்பு இருந்திருக்கிறது. மீதமுள்ள 1,77,577 பள்ளிகளில் இணைய வசதிகள் கிடையாது. அதாவது இந்த பள்ளியில் கணினிகள் இருந்தாலும் அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாது. அதேபோல மொத்த பள்ளிகளில் வெறும் 2.2 சதவிகிதமான பள்ளிகளில் மட்டுமே டிஜிட்டல் நூலகம் இருக்கிறது. மேலும், 14.9% பள்ளிகளில் மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கின்றன.

மின்சாரம்
பள்ளிகளுக்கு மேற்கூரை இல்லாதது, வகுப்பறைகள் இல்லாது எல்லாம் கடந்த தலைமுறையின் பிரச்னை என நாம் நினைத்திருந்தால் அதை தற்போது மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்த புள்ளி விவரங்கள் வலியுறுத்துகின்றன. அதாவது, மேற்குறிப்பிட்ட மொத்த பள்ளிகளில் 10.6% பள்ளிகளில் மின்சாரம் கிடையாது, 23.04% பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் கிடையாது, 12.7% பள்ளிகளில் நூலகங்கள் கிடையாது. இந்த பிரச்னைகள் கடந்த தலைமுறையிலிருந்து இந்த தலைமுறைக்கு தொன்றுதொட்டு வந்து சேர்ந்துள்ளன.

சேர்க்கை
இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மாணவர் சேர்க்கை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020-2021ம் ஆண்டில் 11.35 கோடியாக இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் சேர்க்கை 2021-2022ம் ஆண்டில் 11.49 கோடியாக அதிகரித்துள்ளது. ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவர் சேர்க்கை 4.78 கோடியிலிருந்து 4.83 கோடியாகவும், பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாணவர் சேர்க்கை 2.49 கோடியில் இருந்து 2.51 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு ஏற்கெனவே தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. எனவே மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கற்பித்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications