தள்ளிப்போன விசாரணை.. அவசர அவசரமாக இன்னொரு ‘கேவியட்’.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பரபர மூவ்!
டெல்லி : அதிமுக பொதுக்குழு தொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நடத்திய பொதுக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல், எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அப்பீல்
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஈபிஎஸ் தரப்பினர் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாள ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

பொதுக்குழு முடிவுகள்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்றும், அதனால் பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

ஈபிஎஸ் கேவியட்
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பின் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை நீதிபதி ஏற்க மறுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாளை விசாரணை
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

புதிதாக கேவியட் மனு
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications