பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி! லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? ஆஹா
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும், பாஜகவும் கூட்டணி வைக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் தான் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியை திடீரென்று சந்தித்து பேசிய நிலையில் பின்னணியில் உள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 147 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.

எதிர்கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கு 19 எம்எல்ஏக்களும், 4 சுயேச்சைகளும் ஆதரவாக உள்ளனர். ஆந்திராவை பொறுத்தமட்டில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி அதிக பலத்துடன் அசைக்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கிடையே தான் ஆந்திராவில் கால்பதிக்க பாஜக துடித்து வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.
இது பாஜகவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு தேர்தலில் வடமாநிலங்களில் பாஜகவுக்கு அதிக இடம் கிடைக்கும். தென்மாநிலங்களில் குறைந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வடமாநிலங்களில் பாஜகவுக்கான வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை குறையலாம். இதனால் பாஜக தென்மாநிலங்களிலும் குறிப்பிடும் வகையில் வெற்றி பெற நினைக்கிறது.
இதனை கூட்டணியில் உள்ள கட்சிகள் மூலமாகவும், தங்களுடன் நெருக்கம் காட்டும் கட்சிகள் மூலமாகவும் நிறைவேற்ற பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தான் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இவர் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆலோசனையில் பங்கேற்றவில்லை. முன்னதாக பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி, பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றனர். இதற்கிடையே தான் இன்று ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த வேளையில் ஜெகன் மோகன் ரெட்டி தனது மாநிலத்துக்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் கூட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளும் நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த சந்திப்பு என்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கைகோர்க்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் யானை பலத்துடன் உள்ளது.
ஆனால் பாஜகவுக்கு ஆந்திராவில் செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. இதனால் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க பாஜக முயற்சி செய்கிறது. ஒருவேளை இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சியமைக்க அவரது கட்சியின் ஆதரவை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என தாமரை கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்படலாம். மேலும் இதற்கான துவக்க புள்ளியாக இந்த சந்திப்பை பார்க்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications