ஏர் இந்தியா விமான விபத்து: கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களால் அதிர்ச்சி.. 4 சீனியர்கள் பணிநீக்கம்
டெல்லி: அகமதாபாத் விமானம் விபத்தில் சிக்கிய சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சரக்குகளை கையாளும் பிரிவு ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த கொண்டாட்டம் தொடர்பாக மூத்த அதிகாரிகள் 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். டாடா நிறுவனம் சார்பில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு பைலட்டின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம், அதிக பாரம், விதிமுறை மீறல் என பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையே விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான விபத்தின் சோகம் கூட தீராத நிலையில், ஏர் இந்தியாவின் சரக்குகளை கையாளும் பிரிவு நிறுவன ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து நடந்த தினமான ஜூன் 12 ஆம் தேதிக்குப் பிறகே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த வீடியோ சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், 4 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியாவின் சரக்குகள் கையாளும் பிரிவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் கூறியுள்ளதாவது: விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நாங்கள் துணையாக நிற்கிறோம். சமீபத்தில் வெளியான வீடியோவுக்காக எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சம்பவம் எங்களுடைய நடத்தையை மதிப்பிடாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுதாபம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications