நடப்பது எல்லாம் அதை நோக்கியே.. பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் இந்தியா? மோடி பிளான்?
டெல்லி: பிரதமர் மோடி அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், எடுக்கும் முடிவுகள் காரணமாக இந்தியா பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த தயாராகி வருகிறதோ.. அதற்கான ஆலோசனைகளை, முடிவுகளை எடுக்க தயாராகி வருகிறதோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு வாரமாக தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தொடர்ச்சியான உயர்மட்டக் கூட்டங்களை நடத்தி வருகிறார்

இந்தக் கூட்டங்களில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS), தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து படைத் தலைவர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.
ராஜ்நாத் சிங் உறுதி
முக்கியமாக மக்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும் என்று உறுதியளிக்க விரும்புவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், இந்தியா மீது கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்குத் தக்கப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், நீங்கள் நினைப்பது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தியாவுக்குக் கெடுதல் நினைப்போருக்குத் தக்கப் பதிலடி அளிப்பது எனது பொறுப்பு. ஆயுதப் படைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
மோடி கிரீன் சிக்னல்
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரத்தை உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.
இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.
மாற்றப்பட்ட குழு
பிரதமர் மோடி தலைமையிலான அரசு.. தேசிய பாதுகாப்பு ஆலோசனை போர்ட் எனப்படும் National Security Advisory Board (NSAB) குழுவில் மொத்தமாக மாற்றங்களை செய்துள்ளது. இந்த குழுவின் புதிய தலைவராக அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் உளவு அமைப்பான ரா அமைப்பின் தலைவராக இருந்தவர். இவரின் தலைமையின் கீழ்தான் ரா அமைப்பு கடுமையான பலம் பெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசனை போர்டின் புதிய தலைவர் இவர். அதோடு இந்த குழுவில் புதிதாக 7 உறுப்பினர்கள் இந்த முறை நியமிக்கப்பட்டு உள்ளனர். பல துறை வல்லுனர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டு உள்ளனர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள், 1 ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு துறை - உளவுத்துறை - வெளியுவுறவுத்துறை என்று 3 துறைகளின் பலத்தை ஒரே இடத்தில் கொண்டு வரும் விதமாக இந்த குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களில் முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் மற்றும் ரியர் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர். அதேபோல் குழுவில் இடம்பெற்றுள்ள ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் இந்திய காவல் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் ஆவர். ஏழு பேர் கொண்ட குழுவில் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி பி. வெங்கடேஷ் வர்மாவும் இடம்பெற்றுள்ளார்..
இப்படி பிரதமர் மோடி அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், எடுக்கும் முடிவுகள், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு காரணமாக இந்தியா பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த தயாராகி வருகிறதோ.. அதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறதோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
தயார் நிலையில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது இந்தியா இன்னும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தவில்லை. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவில்லை. பாகிஸ்தான் மீது எந்த விதமான ஏவுகணை பதிலடி தாக்குதல்களையும் நடத்தவில்லை. ஆனால் இப்படி எதுவும் செய்யாமல் இந்தியா பாகிஸ்தானை பதற விட்டுள்ளது. பொதுவாக பார்வையாளர்களால் பரபரப்பாகவும், பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றதாகவும் இருக்கும் பாகிஸ்தானின் நீலம் பள்ளத்தாக்கு வெறிச்சோடி உள்ளது. ஹோட்டல்கள் காலியாக உள்ளன. மேலும் உள்ளூர் வாசிகளும் வெளியேறி விட்டனர். பாகிஸ்தானின் செயல்கள் அந்த நாடு மிக நீண்ட போருக்கு தயாராவதை உறுதி செய்கிறது.
அங்கே 2 மாதங்களுக்கு உணவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) உள்ள 13 தொகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு, மருந்துகள் மற்றும் பிற அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பதட்டம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. எல்லைப் பதட்டங்களை காரணம் காட்டி, 1,000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. முசாபராபாத் மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே உள்ள நகரங்களில், பள்ளி, மதரஸாக்கள் தற்காலிக பயிற்சி முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
அங்கே 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவது, முதலுதவி அளிப்பது மற்றும் காயமடைந்த வகுப்பு தோழர்களை ஸ்ட்ரெச்சர்களில் சுமந்து செல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். கோஸ்ட் டவுன் என்று அழைக்கும் அளவிற்கு சுற்றுலாத் தலங்கள் ஆட்களே இல்லாத பேய் நகரங்களாக மாறி வருகின்றன. கடைகள் கூட காலியாகி உள்ளன. எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சகோதி போன்ற கிராமங்களில், பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்.
மேலும் பதுங்கு குழிகள் வலுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் பள்ளியிலிருந்து நேராக வீடு திரும்பும் வரை ஆட்கள் வைத்து பாதுகாப்பு அளிக்கிறார்கள். முக்கியமான இடங்களில் ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டு உள்ளன.
இரண்டு நாட்டு மோதல்
பாகிஸ்தான் பொதுவாக எல்லை கடந்த தாக்குதல்களை ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை சர்வதேச எல்லையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு உள்ளது.
ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. போர் இல்லாத நேரத்தில் இந்திய வரலாற்றில் இப்படி பாகிஸ்தான் சர்வதேச எல்லை கோட்டை மீறி தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை.
சர்வதேச எல்லை என்பது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் சர்வதேச நாடுகள் மூலம் ஒப்புதல் பெற்ற எல்லை ஆகும். அதாவது சில எல்லை பகுதிகள் உள்நாடுகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். சில எல்லை பகுதிகள் எதிரி நாடுகளால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது போன்ற சர்வ்தேச எல்லைகள் என்பது சர்வதேச கூட்டமைப்பு, உலக நாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எல்லை ஆகும்.
இங்குதான் ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. இதற்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்தது. நேற்று நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 40 நிமிடங்கள் இரண்டு பக்கமும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்து உள்ளது.












Click it and Unblock the Notifications