இந்தியா கூட்டணிக்கு புது சிக்கல்? ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்து போட்டி! காங்கிரஸை விளாசிய கெஜ்ரிவால்
டெல்லி: இந்தியா கூட்டணியில் ஏற்கனவே சிக்கல்கள் நிலவும் நிலையில், ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இருப்பினும், கடந்த சில காலமாக இந்த கூட்டணியில் சிக்கல் நிலவி வருகிறது.

மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டில் இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பீகாரிலும் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியுள்ளார்.
கெஜ்ரிவால்: இதற்கிடையே இந்தியா கூட்டணிக்கு மற்றொரு சிக்கலாக ஹரியானா சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் இப்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்குக் காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. அங்கு லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஹரியானாவில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளார்.
தனித்து போட்டி: ஹரியானாவில் நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால், ஹரியானா மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இன்று ஆம் ஆத்மி கட்சியின் மீது மட்டுமே மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரு பக்கம் பஞ்சாபைப் பார்க்கிறார்கள், மறுபுறம் டெல்லியில் எங்கள் ஆட்சியைப் பார்க்கிறார்கள். இப்போது ஹரியானா ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறது.
டெல்லி மற்றும் பஞ்சாபில், மக்கள் இந்த பெரிய மாற்றத்தை முன்னரே செய்துவிட்டனர். இப்போது அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்... ஆம் ஆத்மி கட்சி ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும், ஹரியானாவில் நாங்கள் ஆட்சியை அமைத்து அதை நாட்டிலேயே முதல் மாநிலமாக மாற்றுவோம். இங்கு ஆட்சி செய்த அனைத்து கட்சிகளாலும் மக்கள் சோர்ந்து போயுள்ளனர்... மற்ற கட்சிகள் தங்கள் கஜானாவை மட்டுமே நிரப்பிக் கொண்டன.
காங்கிரஸ் மீது அட்டாக்: டெல்லி மற்றும் பஞ்சாபில் இருப்பதைப் போல 24*7 மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஆம் ஆத்மியால் மட்டுமே வழங்க முடியும். இதை எல்லாம் காங்கிரஸ், பாஜக கட்சிகளால் செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது. டெல்லி, பஞ்சாபில் நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்பு 7 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை இருந்தது. ஆனால், இப்போது அங்கு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹரியானாவிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதே நிலையை ஏற்படுத்துவோம்" என்றார்.
ஹரியானா சட்டசபைத் தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு பிறகே நடைபெறுகிறது என்ற போதிலும் அவர் இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே நிதிஷ்குமார் விலகல் இந்தியா கூட்டணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில், கெஜ்ரிவால் இப்படிப் பேசியுள்ளது பேசுபொருளானது.












Click it and Unblock the Notifications