மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா.. அரியணைக்காக முட்டி மோதும் தேசிய ப்ளஸ் மாநில கட்சிகள்!
டெல்லி: மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் பிரதான தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் மாநில கட்சிகளும் மிக முக்கியமானவையாக இருக்கின்றன

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநில சட்டசபைகளின் பதவி காலம் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. இதனையடுத்து இம்மூன்று மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நடப்பு 2023-ம் ஆண்டில் நாடு முழுவதும் 9 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த 9 மாநில தேர்தல்களும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளுடன் ஐபிஎப்டி, திப்ரா மோதா ஆகியவை முக்கியமான கட்சிகள். இம்மாநிலத்தில் 2018 தேர்தலில் பாஜக 33 ,ஐபிஎப்டி4, சிபிஎம் 15 காங்கிரஸ் 1 இடத்தில் வென்றது. 6 எம்.எல்.ஏ. இடங்கள் காலியாக உள்ளன. 25 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சியை வீழ்த்தி பாஜக இம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.
திப்ரா மோதா என்பது திரிபுராவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதக இருக்கிறது. திப்ராலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்துகிற இந்த அமைப்பு. ஐபிஎப்டி கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக இருக்கிறது. அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இம்மாநிலத்தில் களமிறங்க உள்ளது. இதுவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாத போதும் சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெல்லப் போகும் இடங்கள் கவனத்தை ஈர்க்கக் கூடியது. இழந்துவிட்ட அரியாசானத்தைப் பெறுவதற்காக சிபிஎம்- காங்கிரஸ் மீண்டும் கை கோர்த்திருக்கின்றன. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக சிபிஎம்- காங்கிரஸ் கை கோர்த்த வரலாறும் இருக்கிறது.
மேகாலயா மாநிலத்தின் 60 தொகுதிகளில் 2018-ல் ன்பிபி 20; யுடிபி 8, பிடிஎப் 2 பாஜக 2, திரிணாமுல் காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது. மேகாலயா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் பிரதான எதிர்க்கட்சி. காங்கிரஸ் கட்சியினரே திரிணாமுல் காங்கிரஸாக உருமாறி இருக்கின்றனர். என்பிபியை பொறுத்தவரை 58 வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடிய சாத்தியம் உள்ள கட்சியாக என்பிபி இருக்கிறது. ஆனாலும் என்பிபி, காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடுவதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதற்கான பலனையும் பாஜக அறுவடை செய்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு போனதால் அக்கட்சி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
நாகாலாந்தின் 60 தொகுதிகளில் இப்போது எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை என்கிற விசித்திர அரசியல் உள்ளது. எந்த கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேரும் என்பதாக உள்ளது. 2018 தேர்தலில் என்பிஎப் 26, என்டிபிபி 18, பாஜக 12 இடங்களில் வென்றது. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வலிமையான கட்சியாக இல்லைதான்.. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கான மாநில கட்சிகளை பிடியில் வைத்துள்ளது. அதேபோல் வலிமையான கட்சியாக இருந்த காங்கிரஸ் சிதறிப் போய் இருக்கிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்தில் மாநில கட்சிகளின் மேலாதிக்கமே வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications