பரபரப்பை கிளப்பும் டெல்லி அரசியல்.. சோனியா புறக்கணிப்பு, சு.சாமியுடன் சந்திப்பு.. மமதா போடும் கணக்கு
டெல்லி: தலைநகர் டெல்லி சென்றுள்ள மே வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளைச் சந்திக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சந்திக்கவில்லை.
வரும் நவ். 29ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் குளிர் காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு மே வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது டெல்லி சென்றுள்ளார்

திரிணாமுல் காங்.இல் ஐக்கியம்
டெல்லியில் மம்தாவை சந்தித்த ஹரியானாவின் அசோக் தன்வார், டெல்லியின் கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்களை திரிணாமுல் காங்கிரஸில் இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தைத் தாண்டி பிற மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது தெரிகிறது. ஏற்கனவே, கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மம்தா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சோனியா - ராகுலை சந்திக்கவில்லை
டெல்லி வந்துள்ள மம்தா முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குளிர்காலக் கூட்டத்தொடரில் பாஜகவை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். பல எதிர்க்கட்சி தலைவர்களை மம்தா சந்தித்த போதிலும், அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சந்திக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவி வரும் நிலையில், சோனியா - ராகுலையும் மம்தா சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருடன் சந்திப்பு
அதேநேரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது திரிபுராவில் வன்முறை குறித்தும் எல்லை பாதுகாப்புப் படையினர் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டது குறித்தும் பிரதமரிடம் பேசியதாக மம்தா குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்காக மத்திய அரசு இன்னும் ரூ.96,605 கோடியைத் தரவில்லை என்றும் இது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

எல்லை பாதுகாப்புப் படை
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "எல்லை பாதுகாப்புப் படையினர் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டால் அது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சீர்குலைக்கும். சட்டம் ஒழுங்கு மாநில பட்டியலில் வரும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தல் சமயத்தில் கூச் பிகாரில் அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனால்தான், கூட்டாட்சி முறை தேவையில்லாமல் தொந்தரவு செய்யப்படக்கூடாது என்பது குறித்து பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

அகிலேஷுடன் கூட்டணி?
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் தேர்தலில் களமிறங்குவது குறித்துப் பேசிய மம்தா, "எங்கெல்லாம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேவை எழுகிறதோ, அங்கெல்லாம் நாங்கள் போராடுவோம். உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கு எங்கள் ஆதரவு தேவைப்பட்டால், அவர்களுடன் இணைந்து நாங்கள் போராடுவோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

சுப்பிரமணியன் சுவாமி
இதனிடையே மம்தா பானர்ஜியைச் சந்தித்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி மறைந்த தலைவர்களான ஜேபி, மொரார்ஜி தேசாய் உள்ளிட்டோருடன் மம்தாவை ஒப்பிட்டுப் புகழ்ந்து தள்ளியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இது எங்குச் சுப்பிரமணியன் சுவாமியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவாரோ என்ற வியூகங்களையும் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications