'ஊரடங்கு or வேக்சின்' எது அதிக பலன் தருகிறது?மிரட்டும் டெல்டா கொரோனா- திணறும் வல்லரசுகள்..ஷாக் தகவல்
டெல்லி: உலகின் பல்வேறு நாடுகளிலும் டெல்டா கொரோனாவால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கு அல்லது வேக்சின் பணிகள் இந்த இரண்டில் எது அதிக பலனைத் தருகிறது என்பதில் பெரும் விவாதமே எழுந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. கொரோனா பரவ தொடங்கி 1.5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையிலும்கூட வைரஸ் பாதிப்பை இன்னும்கூட எந்தவொரு நாட்டினாலும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
சில நாடுகள் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் சில காலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தின. இருந்தாலும்கூட அவை நீண்ட காலத்திற்கு வைரசைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவவில்லை. தொடர்ந்து உருமாறும் கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

திணறும் நியூசிலாந்து
கொரோனா முதல் அலை சமயத்தில் இருந்தே வைரஸ் பாதிப்பைச் சிறப்பாகக் கையாண்ட நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ஒருவருக்கு டெல்டா கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்டா கொரோனா
இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த டெல்டா கொரோனா, இப்போது உலக நாடுகளுக்கும் தலைவலியைக் கொடுத்து வருகிறது. நியூசிலாந்து மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இதே நிலை தான். இந்த மூன்று நாடுகளுமே கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையைச் சிறப்பாகக் கையாண்டவை. ஆனால் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதில் இந்த நாடுகள் திணறி வருகின்றன. முதல் அலையைக் கட்டுப்படுத்த உதவிய எந்தவொரு யுக்தியைக் கொண்டும் டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த முடிவதில்லை

ஜப்பான்
மின்னல் வேகத்தில் பரவும் டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அல்லது வேக்சின் பணிகள் என இந்த இரண்டில் எது அதிக பலனைத் தரும் என்பதில் மிகப் பெரிய விவாதமே இந்த மூன்று நாடுகளிலும் எழுந்துள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த ஜப்பான் ஒரு நாளும் ஊரடங்கை அறிவிக்கவில்லை. ஊரடங்கு என்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் ஊரடங்கிற்கு எதிரான மனநிலையையே பெரும்பாலான ஜப்பானிய மக்கள் கொண்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு முன்னரே, இதர வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவும் காற்று மாசு காரணமாகவும் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஜப்பான் மக்கள் வழக்கமான ஒன்றாக வைத்திருந்தனர்.

வேக்சின் தான் ஒரே வழி
இதனால் முதல் அலையில் பெரியளவு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இரவு விடுதிகளுக்கு அனுமதித்தது, டோக்கியோ ஒலிம்பிக் உள்ளிட்ட காரணங்களால் அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் யோஷிஹிட் சுகாவுக்கு ஆளுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் அவை டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரியளவு பலன் தரவில்லை என்றும் வேக்சின் பணிகளை அதிகரிப்பதே ஒரே வழி என்பதில் பிரதமர் யோஷிஹிட் சுகா உறுதியாக உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் என்ன நிலை
ஆஸ்திரேலியாவிலும் கிட்டதட்ட இதே நிலை தான். அங்கு லாரி ஓட்டுநர் ஒருவர் மூலம் பல பகுதிகளில் கொரோனா பரவிவிட்டது. இருப்பினும், முதல் அலை சமயத்தில் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்து கொரோனாவை கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா இந்த முறை வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. சிட்னி நகரில் முதலில் 10 நாட்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது 2 மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது.
Recommended Video

என்ன காரணம்
இந்த மூன்று நாட்டிலும் ஒரே சிக்கலே உள்ளது. அதாவது மூன்று நாடுகளிலும் வேக்சின் பணிகள் மிக மிக மந்தமாகவே நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டில் வெறும் 32% மக்களுக்கு மட்டுமே முழுமையாக 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. மிகத் தாமதமாக வேக்சின் பணிகளைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவில் 29% பேருக்கும், நியூசிலாந்தில் 20% பேருக்கும் மட்டுமே முழுமையாக வேக்சின் போடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்த 3ஆம் தான் மிகக் குறைவாகும்.

வேக்சின் or ஊரடங்கு
ஊரடங்கு என்பது கொரோனா பரவலைத் தள்ளிப்போட ஒரு வழியே தவிர, அதை ஒழிக்கும் வழியில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. கொரோனா வேக்சின் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டுள்ள நாடுகளில் டெல்டா கொரோனாவால் கூட உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஊரடங்கு கொரோனா பாதிப்பைத் தள்ளிப்போடும் என்றால் கூட கொரோனாவை ஒழிக்க தற்போதைய நிலையில் வேக்சின் மட்டுமே ஒரே ஆயுதம் என்பது வல்லுநர்களின் ஆணித்தரமான கருத்து. எனவே, முடிந்த வரை விரைவில் ஒரு 2 டோஸ் வேக்சினை போட்டுக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications