இந்தியாவுக்கு அடிமேல் அடி.. சீனா மாதிரியே பாகிஸ்தானை ஆதரிக்கும் அமெரிக்கா.. டிரம்ப் திட்டம் என்ன?
டெல்லி: நம் நாட்டின் எதிரி நாடான பாகிஸ்தானை தொடர்ந்து சீனா ஆதரித்து வருகிறது. அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக விரிசலில் இருந்த நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் அதனை மேம்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளது. சீனாவும், அமெரிக்காவும் போட்டி போட்டு பாகிஸ்தானை ஆதரிப்பது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. இதனால் நம் நாடு எந்த வகையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் நம் நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. நம் நாட்டுக்கு எப்படி ரஷ்யா நட்பு நாடோ. அதேபோல் பாகிஸ்தானுக்கு நட்பு நாடாக அமெரிக்கா இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக ஜோபைடன் இருந்தபோது அவர் பாகிஸ்தானை கைவிட்டார். இதனை சாதகமாக பயன்படுத்தி சீனா, பாகிஸ்தானுக்கு உதவி செய்தது.

சீனா - பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ள நிலையில் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மேம்பட்டது. சீனாவிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாகிஸ்தான் வாங்கி குவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்களில் சுமார் 70 முதல் 80 சதவீதம் சீனாவின் தயாரிப்பாக உள்ளது.
பாகிஸ்தானை எதிர்க்காத டிரம்ப்
சமீபத்தில் நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் சீனா பாகிஸ்தானுக்கு உதவியது. நம் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளின் வழிப்பாதையை கண்டறிந்து சீனா முன்கூட்டியே பாகிஸ்தானை அலர்ட் செய்தது. இப்படி பாகிஸ்தான் - சீனா இடையேயான உறவு பலமானது. இதற்கிடையே தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார்.
இவர் தொடர்ந்து பாகிஸ்தானை அரவணைத்து வருகிறார். பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆனாலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. இதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெற்றுள்ளது. இதற்கு நம் நாடு எதிர்ப்பு தெரிவித்தது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அந்த நிதியை செலவிடும் என்று தெரிவித்தது. ஆனால் டிரம்ப் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுக்கான ஒப்புதல் கிடைத்தது.
பாகிஸ்தானுடன் எண்ணெய் ஒப்பந்தம்
அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது மோதலை கைவிட்டால் வர்த்தகம் செய்யலாம் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா பேசியது. அதுமட்டுமின்றி போர் முடிவடைந்த பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து அளித்தார். இது எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தானும், அமெரிக்காவும் தற்போது ஒரு முக்கிய ஒப்பந்தத்தை செய்துள்ளன.
அதாவது இதுபற்றி டொனால்ட் டிரம்ப், ‛‛பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து எண்ணெய் வளங்களை மேம்படுத்தும். இந்த கூட்டுக்கு தலைமை தாங்க ஒரு எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருக்கிறோம். ஒருவேளை பாகிஸ்தான் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்'' என கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை கண்டறிந்து அதனை உலகம் முழுவதும் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பெரிய லாபம்
டொனால்ட் டிரம்பின் இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் எண்ணெய் வளம் மிக்க நாடாக மாறும். அங்கிருந்து பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய்கள் விற்பனையாகும். இதன்மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேம்படும். இப்படி நடந்தால் அந்த நிதியை பயன்படுத்தி பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு நம் நாட்டுக்கு எதிராக கொம்புசீவி விடும். இதனால் டிரம்பின் இந்த நடவடிக்கை நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
டிரம்பின் திட்டம் என்ன?
டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் 3 முக்கிய விஷங்கள் உள்ளன. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவின் டாலரின் மதிப்பை குறைக்க முயன்று வருவது டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதனால் பாகிஸ்தானை அரவணைப்பதன் மூலமாக பிரிக்ஸில் உறுப்பினர்களாக உள்ள சீனா, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று டிரம்ப் நினைக்கலாம்.
2வது விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் உள்ளதை பயன்படுத்தி அந்த நாட்டுக்கு உதவும்போது எளிதாக அந்த நாட்டை கபளீகரம் செய்யலாம். பாகிஸ்தான் ராணுவ தளம், விமான தளம், கடற்படை தளங்களை கூட பயன்படுத்த முடியும். இதன்மூலம் நேரடியாக சீனா, இந்தியாவை மிரட்டலாம் என்று டிரம்ப் நினைக்கலாம்.
3வது விஷயம் என்னவென்றால் அமெரிக்கா சார்பில் வல்லரசு நாடான ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவையும் அமெரிக்கா சீண்டி வருகிறது. அதேபோல் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியாவை முடக்க டிரம்ப் நினைக்கிறார். இதனை தடுக்க பாகிஸ்தானை பகடைக்காயாக மாற்றலாம் என்று டிரம்ப் நினைக்கலாம்.
சீனாவின் நிலைப்பாடு என்னவாகும்?
அதுமட்டுமின்றி ஏற்கனவே சீனா, பாகிஸ்தானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவற்றை சீனா மேம்படுத்தி உள்ளது. அதேபோல் கடனாகவும் சீனா ஏராளமான நிதியை வாரி இறைத்துள்ளது. இப்படி சீனா - பாகிஸ்தான் கூட்டு என்பது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் இந்த அணியில் இப்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது. இது நம் நாட்டுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவும், அமெரிக்காவும் ஒரே அணியில் எப்போதும் இருப்பது இல்லை. இருநாடுகளும் வல்லரசுகள் என்றாலும் கூட யார் பெரியவர்கள் என்ற அதிகார போட்டி உள்ளது. இதனால் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான உறவு மேம்படும் பட்சத்தில் சீனாவின் ஆதரவு பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது. இருப்பினும் கூட இன்றைய தேதியில் போட்டிப்போட்டு கொண்டு பாகிஸ்தானை சீனா, அமெரிக்கா நாடுகள் தூக்கிப்பிடிப்பது நம் நாட்டுக்கு பெரும் தலைவலியாக தான் பார்க்கப்படுகிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications