Bihar SIR: "வாக்காளர்களுக்கு எதிரானது இல்லை!" பீகார் சார் வழக்கில்.. மனுதாரர் வாதத்தை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பீகாரில் நடத்தப்பட்ட சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் ஆவணச் சரிபார்ப்பு நடைமுறை "வாக்காளர்களுக்கு எதிரானது" என்று மனுதாரர்கள் வாதத்தை முன்வைத்த நிலையில், சுப்ரீம் கோர்ட் இதில் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளது.
பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை நடைபெற்றது. இருப்பினும், இந்த நடைமுறைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்றைய தினம் இது தொடர்பான வழக்கில் காரசார விவாதம் நடைபெற்றது. சுப்ரீம் கோர்டும் பல முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தது.

மீண்டும் விசாரணை
குறிப்பாக இதில் சட்டவிரோதச் செயல்முறை கண்டறியப்பட்டால் சார் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் கூறியிருந்தது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடர்ந்தது. நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தன் வாதங்களை முன்வைத்தார்.
முக்கியமான வாதம்
அப்போது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி நீதிமன்றத்தில், "ஆதார் அட்டை மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் பட்டியலில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களிடம் இருக்கும் இந்திய பாஸ்போர்ட் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட பெரும்பாலான ஆவணங்கள் 2-3% மக்களிடம் மட்டுமே உள்ளன.. இவற்றில் மூன்று ஆவணங்கள் நில உடமை தொடர்பானவை. நிலம் இல்லாதவர்களால் அதைத் தர முடியாது.
பீகாரில் மிகக் குறைவான மக்களிடம் மட்டுமே இருக்கும் ஓய்வூதிய அட்டைகள் போன்ற ஆவணங்களை எல்லாம் ஏற்கப்படும் ஆவணமாகத் தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. இதுபோல மிக குறைவான மக்களிடம் இருக்கும் ஆவணங்களைச் சேர்த்து, அனுமதிக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் 11 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தான் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் காட்டிக் கொள்ள முயல்கிறது" என்றார்.
நீதிபதிகள் கருத்து
அப்போது நீதிபதி பாக்ஸி, "ஆதார் இந்தப் பட்டியலில் இல்லாதது குறித்த உங்களது வாதத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், ஆவணங்களின் எண்ணிக்கை வைத்துப் பார்க்கும்போது இந்த நடைமுறை வாக்காளர்களுக்கு மிகவும் சாதகமானது, எதிரானது அல்ல. நீங்கள் குடியுரிமையை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள்" என்று குறிப்பிட்டார்.
நீதிபதி சூரிய காந்த்தும் கிட்டத்தட்ட இதே கருத்துகளைக் கூறினார். அவர் மேலும், "தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களையும் கேட்டால், அது வாக்காளர்களுக்கு எதிரானது. ஆனால், அவற்றில் ஏதேனும் ஒரு ஆவணம் மட்டும் கேட்கப்பட்டால் அதை எப்படி எதிரானதாகக் கருத முடியாதும்" என்று கேட்டார்.
கற்பனையானது
அப்போது சிக்கலை விளக்கிய சிங்வி, "இதற்கு நான் விளக்கமளிக்கிறேன். உங்களுக்கு நிலம் இல்லையென்றால்.. தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள நம்பர் 5, 6, 7 சான்றிதழ்களைக் கொடுக்க முடியாது.. நம்பர் 1 மற்றும் 2க்கும் வாய்ப்பில்லை. வசிப்பிடச் சான்றிதழ்கள் பீகாரில் இல்லை. பாஸ்போர்ட் அனைவரிடமும் இருக்கும் என நினைப்பது கற்பனையானது" என்றார்.
அப்போது நீதிபதி சூரிய காந்த் குறுக்கிட்டு, "பீகாரை இப்படிச் சித்தரிக்க வேண்டாம். குடியுரிமை பணியில் அதிகபட்சப் பிரதிநிதித்துவம் கொண்ட மாநிலமாக பீகார் இருக்கிறது. அதிகபட்ச ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் அங்கிருந்து வந்தவர்கள்" என்றார்.
11 ஆவணங்கள் என்பதே பொய் பிம்பம்
இருப்பினும், சிங்வி தனது வாதத்தில் விடாப்பிடியாக இருந்தார். "நீங்கள் 11 ஆவணங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். இந்த 11 ஆவணங்களில் மூன்று ஆவணங்கள், எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளன. மற்ற இரண்டு சந்தேகத்திற்குரியவை. எனவே, இந்தப் பிரம்மாண்டமான 11 ஆவணப் பட்டியல், ஒரு சீட்டுக்கட்டு மாளிகை போல தான்" என்றார் மேலும், மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கக் கேட்கப்படுவதாகவும், இது 1995 ஆம் ஆண்டு லால் பாபு தீர்ப்புக்கு முரணானது என்றும் அவர் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications