டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்..இந்தியில பெயர் இருக்கே! கவனிச்சீங்களா? கொளுத்தி போடும் திருச்சி சூர்யா
டெல்லி : ஜி 20 மாநாடு தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் அவரது பெயர் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை குறிப்பிட்டுள்ள பாஜக பிரமுகரான திருச்சி சூர்யா சிவா 'முதல்வர் பெயரில் இந்திய திணிச்சிட்டாங்க... இதற்கு கண்டனம் ஆர்ப்பாட்டம் உண்டா" என கொளுத்தி போட்டு உள்ளார்.
உலகின் பலம் பொருந்திய g20 அமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது இதை எடுத்து அடுத்த ஆண்டு ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்தியாவில் மாநில அளவில் ஜி-20 மாநாடு மற்றும் கருத்துரு மாநாடுகள் அடுத்தடுத்து நடக்க இருக்கிறது இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

பிரதமர் மோடி
இந்நிலையில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதன் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்," அமைதி அகிம்சை நல்லிணக்கம் சமத்துவம் சமூக நீதி ஆகிய உயர் ஒளிமயங்களை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என உறுதியாக நம்புவதாக கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைப்பால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி," ஜி 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது பெருமைமிக்க தருணம் என்றும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் மனதிலும் இந்த பெருமை என்றென்றும் நிலைத்திருக்கும்" என பேசினார்.

திருச்சி சூர்யா சிவா
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மத்திய அரசு சார்பில் செய்யப்பட்டு இருந்த நிலையில் முதலமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனித்தனியே இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இருக்கைகளுக்கு முன்பாக தலைவர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பெயர் பலகையை வைத்து தான் பாஜகவில் இருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் திருச்சி சூர்யா சிவா புதிய பிரச்சனை ஒன்றினை கொளுத்தி போட்டு இருக்கிறார்.

இந்தியில் பெயர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அனைத்து கட்சி தலைவர்கள், முதல்வர்களின் பெயர்களும், பொறுப்பு மற்றும் கட்சி ஆகியவை இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவிலும் இந்த புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள திருச்சி சூர்யா சிவா "ஹமாரா நேம் ஸ்டாலின் மே தமிழ்நாடு சீப் மினிஸ்டர் ஹிந்தியை திணிச்சிட்டாங்க இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் உண்டா ? பதிவிட்டு இருக்கிறார்.

இந்தி திணிப்பு
திமுகவை பொருத்தவரை மத்திய அரசின் இந்தி திணிப்பை வெகுவாக எதிர்த்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருமே மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் திமுக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்திய எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications