ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவசம்! "சோலார் மின்சாரம்.." நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகள் நிறுவப்படும் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு மாதாமாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த முறை லோக்சபா தேர்தல் காரணமாக நிர்மலா சீதாராமன் கடந்த பிப். மாதம் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தார்.

இதற்கிடையே இன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் துறை ரீதியாகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.
குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வேலைவாய்ப்பு மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்திய அவர், இது தொடர்பாக விரைவில் கொள்கை ஆவணம் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
அடுத்து பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா ( PM Surya Ghar Muft Bijli Yojana) தொடர்பாகவும் சில முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இது புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடி வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகள் நிறுவப்பட்டு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏற்கனவே, இத்திட்டத்தில் 1.28 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது மிகப் பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications