விரைவில் சட்டமன்ற தேர்தல்.. பட்ஜெட்டில் பீகாருக்கு அறிவிக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்கள்!
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதில் பீகார் மாநிலத்திற்கு என 5 பெரிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதில் மற்ற மாநிலங்களை விட பீகார் மாநிலத்திற்குதான் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

1.பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், பதப்படுத்துதல் மற்றும் புத்தாக்க நிறுவனம்
2.கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள்
3.ஐஐடி பாட்னாவின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்
4.பீகாரில் தாமரை விதை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய வாரியம்
5.விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு திட்டம்
முதல் அறிவிப்பை பொறுத்தவரை, பீகாரில் அமைய உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் பதப்படுத்துதல் மற்றும் புத்தாக்க நிறுவனம், ஒட்டுமொத்த கிழக்கு மாநிலங்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்ற சொல்லப்படுகிறது. இத விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும், உற்பத்தியின் மதிப்பை கூட்டும், இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இரண்டாவதாக அறிவிப்பை பொறுத்தவரை பீகாரில் புதிய விமான நிலையங்கள் வர இருக்கின்றன. எதிர்கால விமான போக்குவரத்தை கணக்கில் கொண்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத இடத்தில் உருவாக்கப்படும் விமான நிலையங்களை தான் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் என்று அழைப்பார்கள். மட்டுமல்லாது இந்த வகை விமான நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அமைந்திருக்கும். அதேபோல பாட்னா விமான நிலையம் விரிவுப்படுத்தி மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மூன்றாவதாக, ஐஐடி பாட்னாவை மேம்படுத்துவது. நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும், இதை விட உயர்ந்த தரத்தில் புதிய ஐஐடிகளை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. ஆனால், அதற்கு பதிலாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஐஐடியை மட்டும் மேம்படுத்துவதாக வெளியான அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வடஇந்திய மாநிலங்களில் தாமரை விதைகள் சிறந்த உணவு பொருளாக இருக்கிறது. அங்கு கோடிக்கணக்கான குடும்பங்கள் தாமரை விதை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றன. மக்கானா என்று அழைக்கப்படும் இந்த தாமரை விதையில் வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. பீகாரிலும் தாமரை விதை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே அதனை ஊக்குவிக்கும் விதமாக புதிய வாரியம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
பீகாரில் வேளாண் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இதனை இன்னும் மேம்படுத்த புதிய சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
பீகார் போல வேறு எந்த மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டு நிதியமைச்சர் இப்படியான அறிவிப்புகளை வெளியிடவில்லை. பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது. இதனை மனதில் வைத்துதான் நிதியமைச்சர் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications