எச்சரிக்கை.. இந்த ஊரில் இருப்போர் அலர்ட்டா இருங்க.. கனடா புது வார்னிங்! லிஸ்டில் தென்னிந்திய நகரம்
டெல்லி: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டவருக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதிலும் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பியவுடன் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய சில கருத்துகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டது.

அதாவது கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் கனடாவில் வைத்து கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதற்கு இந்தியா தான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இதற்குக் காரணமாகும்,
இந்தியா சொல்வது என்ன: கனடாவின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக ஆதாரத்தை வெளியிடும்படி வலியுறுத்தியது. இருப்பினும், ஆதாரத்தை வெளியிட மறுக்கும் கனடா தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டி மட்டுமே வந்தது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வந்தது.
மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டவருக்கு விசா வழங்கப்படாது என இந்தியா அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள அதிகப்படியான தூதர்கள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
41 தூதர்கள் வாபஸ்: இதற்கிடையே இந்தியாவில் உள்ள 41 தூதர்களைக் கனடா திரும்பப் பெற்றுள்ளது. மேலும், அவர்கள் குடும்பத்தினரும் இந்தியாவில் இருந்து கிளம்பியுள்ளனர். மேலும், மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூருவில் உள்ள துணைத் தூதரகங்களைக் கனடா தற்காலிகமாக மூடியுள்ளது.
இந்த மூன்று நகரங்களில் உள்ள தனது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கனடா அரசு, இந்தியாவில் உள்ள கனடா மக்கள் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள தலைமை தகரத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: இப்படி இரு தரப்பும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கனடா இந்தியாவில் இருக்கும் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாடு முழுவதும் உள்ள பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள கனடா மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்தியா கனடா உறவில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கனடாவுக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. இதனால் அங்கே கனடாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் கனடா நாட்டினர் அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகலாம். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் வசிக்கும் கனடா மக்கள் அறிமுகமில்லாதவர்களுடன் பேச வேண்டாம்.. மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது
இந்தியா நகரங்கள்: பெங்களூரு, சண்டிகர் மற்றும் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. அந்த நகரங்கள் அல்லது சுற்றியுள்ள பகுதிகளில் தூதரக சேவைகள் தற்காலிகமாக இருக்காது. பிக்பாக்கெட் மற்றும் பணம் பறிப்பு சம்பவங்கள் இங்கே சாதாரணமாகவே நடைபெறும். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் குற்றவாளிகள் வெளிநாட்டினரைக் குறிவைக்கலாம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications