போலி, கலப்பட மருந்துகள் தயாரிப்பு.. 18 நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்து.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: கடந்த 15 தினங்களாக தரம் குறைந்த மருந்துகள் தயாரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய மத்திய மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாடு அமைப்புகள் அதிரடி சோதனை மேற்கொண்டன. 76 மருந்து கம்பெனிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 18 நிறுவனங்கள் போலியான மற்றும் கலப்படமான மருந்துகளை தயாரித்தது கண்டறியப்பட்டது.
உலக அளவில் மருந்து பொருட்கள் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சூழலில், இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்துகளை குடித்ததால் உஸ்பெஸ்கிதான் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்திய நிறுவனத்தின் மருந்து..
நொய்டாவில் உள்ள மரியான் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த இரண்டு இருமல் மருந்துகளை எடுத்து கொண்ட 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், காம்பியா நாட்டிலும் கிட்டதட்ட 70 குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்திய நிறுவனத்தின் மருந்தே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடும் நெருக்கடி
சென்னையை சேர்ந்த குளொபல் பார்மா ஹெல்த் கேர் நிறுவனத்தின் கண் மருந்தால் அமெரிக்காவில் சிலருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தனது தயாரிப்பு சொட்டு மருந்து அனைத்தையும் சென்னையை சேர்ந்த நிறுவனம் திரும்ப பெற்றது. சமீப காலமாக இந்தியாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் இப்படி சர்ச்சையில் சிக்கியது சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

அதிரடி சோதனை
இந்த நிலையில், கடந்த 15 தினங்களாக தரம் குறைந்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றனவா? என 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருந்து நிறுவனங்களில் மத்திய மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாடு அமைப்புகள் அதிரடி சோதனை மேற்கொண்டன. 76 மருந்து கம்பெனிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 18 நிறுவனங்கள் போலியான மற்றும் கலப்படமான மருந்துகளை தயாரித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்களும் அதிரடியாக பறிக்கப்பட்டன.

போலியான, கலப்பட மருந்து தயாரித்த
தரம் குறைந்த மருந்துகளை தயாரித்ததற்காக 76 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் வெளியான தகவலின் படி, போலியான மற்றும் கலப்பட மருந்துகளை தயாரித்து விதிகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் 26 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

203 நிறுவனங்கள்
மத்திய மாநில அரசுகளின் ஒழுங்குமுறை அமைப்புகள் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில், 203 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் இமாசல பிரதேசத்தில் 80 நிறுவனங்களும் உத்தரகாண்டில் 45, மத்திய பிரதேசத்தில் 23 நிறுவனங்களும் அடங்கும் என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications