காவிரி: உச்சநீதிமன்றத்தில் மூக்குடைபட்ட கர்நாடகா-பேச்சுவார்த்தையை தமிழ்நாடு நிராகரித்தது நியாயமானது!
டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப் போராட்டமே நமது ஒரே ஆயுதம் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இதனை தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால் எடுத்த எடுப்பிலேயே கர்நாடகா தரப்பு இதனை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழ்நாட்டு பிரதிநிதிகள், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு: அத்துடன் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 5,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தாமல் மிக குறைவான நீரைத்தான் திறந்துவிட்டது.
மேலாண்மை ஆணைய உத்தரவு: இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கான 24,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால் காவிரி ஒழுங்காற்று குழுவும் கூட வினாடிக்கு 5,000 கன அடிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிட்டது. இதனடிபப்டையிலும் சொற்ப நீரையே கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 2 வாரங்களுக்கும் மேலாக கர்நாடகாவில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா: அதேநேரத்தில் கர்நாடகா அரசோ, அணைகளில் போதுமான நீர் இல்லை; ஆகையால் தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்ய கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அத்துடன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை கேட்டும் மனுத் தாக்கல் செய்தது.
சட்டப் போராட்டத்துக்கு எதிர்ப்பு: இதனிடையே கர்நாடகா தரப்பில் தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டங்கள் தேவையற்றது; தமிழ்நாடு அரசு தேவையற்ற தொந்தரவு தருகிறது என முதல்வர் சித்தராமையா தொடங்கி அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ராஜ்யசபாவிலும் சட்டப் போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியாது; பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உருக்கமாகவும் பேசினார்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்த கர்நாடகா: ஆனால் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொடக்கம் முதலே காவிரி பிரச்சனைக்கு இனி பேச்சுவார்த்தையே கிடையாது; சட்டப் போராட்டங்கள் மூலம்தான் நாம் உரிமையை பெற்றுள்ளோம். அப்படியே இனியும் தொடர்ந்து செயல்படுவோம். காவிரி பேச்சுவார்த்தைகளில் நாம் சொல்வதை கர்நாடகா அரசு தரப்பு காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. ஆகையால் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது. சட்டப் போராட்டம் என்பதுதான் தமிழ்நாட்டுக்கான ஒரே ஆயுதம் என திட்டவட்டமாக கூறி வந்தார்.
உச்சநீதிமன்றத்தில் இறங்கி அடித்த தமிழ்நாடு: இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கவாய் பெஞ்ச் இன்று காவிரி வழக்கு விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையின் போது கர்நாடகாவில் போதுமான நீர் இல்லை என்கிற வாதத்தை ஏற்கலாம்; வறட்சி கால அட்டவணைப்படியாவது காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட்டு ஆக வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கர்நாடகா வழக்கம் போல வறட்சி நிலவுகிறது என பஞ்சப்பாட்டு பாடியதால் தமிழ்நாடு அரசு தரப்பு இப்படி இறங்கி அடித்தது.
தமிழ்நாடு அரசு நிலைப்பாடு நியாயமானது: இறுதியாக தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அமல்படுத்தியாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கறாராக உத்தரவிட்டுள்ளது. சட்டப் போராட்டமே நடத்தக் கூடாது என ஜால்ஜாப்பு சொன்ன கர்நாடகா, உச்சநீதிமன்றத்தில் மூக்குடைபட்டிருக்கிறது. சட்டப் போராட்டமே ஆயுதம் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சரிதான் என்பது உச்சநீதிமன்ற உத்தரவால் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications