அடுத்து என்ன அரெஸ்ட்டா.. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. மணீஷ் சிசோடியா அதிரடி பேட்டி
டெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தல், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து மதுபான உரிமம் வழங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளின் சோதனைக்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.

அச்சமில்லை
இந்த நிலையில் சிபிஐ சோதனைக்கு பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அடுத்த ஓரிரு நாட்களில் நான் கைது செய்யப்படலாம். ஆனால் அதற்காக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த யாரும் அஞ்சப்போவதில்லை. டெல்லியின் கலால் கொள்கை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டது. அதில் எந்த ஊழலும் இல்லை.

பாஜக மீது குற்றச்சாட்டு
பாஜகவின் பிரச்னை டெல்லியின் கலால் கொள்கை ஊழல் பற்றி அல்ல. அவர்களுக்கு கலால் கொள்கையில் எந்த மோசடி நடந்தாலும் கவலைப்படப் போவதில்லை. அவர்களின் பிரச்னை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு பாஜகவின் கவலை அதிகரித்துள்ளது.

ஆம் ஆத்மி அரசு
என் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனை மற்றும் எனக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், அரவிந்த் கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்தவே செய்யப்படுகின்றன. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் கெஜ்ரிவால் மேற்கொள்ளும் சிறந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

நாடாளுமன்றத் தேர்தல்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவரின் நண்பர்களைப் பற்றியே சிந்திக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தல், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி Vs பாஜக
ஏற்கனவே குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இலவச கல்வி, மருத்துவம், மகளிருக்கான உரிமைத் தொகை, மின்சாரம் என அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இலவசங்கள் வழங்குவது குறித்து மறைமுகமாக எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். இதனிடையே டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்தியுள்ள சோதனை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications