சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு.. சுப்ரீம் கோர்ட் பரபர தீர்ப்பு.. சாட்டையடி!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை கடந்த டிசம்பர் 6ம் தேதி நிறைவு செய்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம் ஜோசப் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுப்பில் சென்று இருக்கிறார். அதனால் தலைமை நீதிபதியின் தீர்ப்பையும் நீதிபதி எஸ்.கே கவுல் வழங்கினார்.

என்ன வழக்கு
குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார். இந்த குரேஷியிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா குற்றச்சாட்டு வைத்தார்.

பெரிய பிரச்சனை
இதனால் சிபிஐ அமைப்பிற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சிபிஐ மீது சிபிஐ வழக்கு பதிந்து, சிபிஐ அலுவலகத்திலேயே சோதனை செய்தது. இந்த சோதனை முற்றவே மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ பொறுப்பு இயக்குனராக செயல்படுவார் என்றது. மத்திய அரசின் இந்த முடிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு தொடுத்தார்
கட்டாய விடுப்பிற்கு எதிராக இயக்குனர் அலோக் வெர்மா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முழுக்க நடந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

விசாரணை முழுமையாக முடிந்தது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இதற்காக விசாரணை கமிட்டி அமைத்தார். இந்த கமிட்டி அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்தும் அறிக்கை அனுப்பி இருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது. இந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதி இந்த வழக்கு விசாரணை முழுமையாக முடிந்தது.

தீர்ப்பு என்ன
இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு உள்ளது. நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம் ஜோசப் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது. சிபிஐ பணி நியமன விதிப்படி இயக்குனரை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது தவறு என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்குகிறார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பால் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

என்ன கூறினார்கள்
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், மத்திய அரசு, அலோக் வெர்மாவை நீக்கும் முன் உரிய ஆலோசனை செய்திருக்க வேண்டும். சிபிஐ தேர்வு கமிட்டியான் விஜிலென்ஸ் அமைப்பிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. இது தவறான நடைமுறை. இதனால் மத்திய அரசின் உத்தரவு நீக்கப்படுகிறது, என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எடுக்க முடியாது
ஆனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இப்போது எந்த விதமான முக்கிய முடிவுகளும் எடுக்க கூடாது. விஜிலென்ஸ் அமைப்பின் உயர் கமிட்டி குழு இந்த வழக்கு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அதன் பின்பே சிபிஐ இயக்குனர் முக்கிய முடிவுகளை எடுக்கலாம், என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இன்னும் சில வாரத்தில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் பதவிக் காலம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications