எங்களுக்கு சிபிஐயை கட்டுப்படுத்த முழு அதிகாரம் உள்ளது.. மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அதிர்ச்சி
சிபிஐ அமைப்பை தேவையான சமயங்களில் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி: சிபிஐ அமைப்பை தேவையான சமயங்களில் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே நிலவி வந்த பிரச்சனையை அடுத்து இவர்கள் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக அலோக் வெர்மா வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தனது கட்டாய விடுப்பிற்கு எதிராக தொடுத்த வழக்கில் கடந்த ஒரு மாதமாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இன்று மத்திய அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் வாதிட்டார்.

சண்டையிட்டனர்
அதில் அவர், சிபிஐ அமைப்பில் இயக்குனரும், சிறப்பு இயக்குனரும் மோசமாக சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்யும் பூனைகள் போல அடித்துக் கொண்டார்கள். இந்தியாவே இவர்களின் சண்டையை பார்த்து சிரித்தது, பதறியது, பயந்தது. அந்த அளவிற்கு நிலைமை மோசமானது.

மத்திய அரசு தலையீடு
அதனால்தான் மத்திய அரசு இதில் தலையிட்டது.ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இங்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்சனை மத்திய அரசின் தலையீட்டின் காரணமாகத்தான் சரியானது. நாங்கள் அவர்களை விடுப்பில் அனுப்பி பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால், பல நாட்கள் இது தொடர்ந்து இருக்கும். கடவுளுக்குத்தான் இந்த பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியும்.

ஆனால் இப்போதும்
ஆனால் அவர்கள் பதவி பறிக்கப்படவில்லை. இப்போதும் அவர்கள் தங்கள் பதவியில்தான் இருக்கிறார்கள். தற்போதும் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாதான். சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாதான். யாரிடம் கேட்டாலும் அவர்கள் இதைதான் சொல்வார்கள்.

முழு அதிகாரம்
மத்திய அரசுதான் சிபிஐ அதிகாரிகளை நியமனம் செய்கிறது. அதனால் அவர்களை கட்டுப்படுத்தும் முழு உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. சிபிஐ அமைப்பின் நலன் கருதி மோசமான சூழ்நிலைகளில் சிபிஐ அமைப்பை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கடமை, அந்த அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications