அடேங்கப்பா.. பெட்ரோல் டீசல் விலை.. இதுதான் காரணமா.. 6 ஆண்டுகளில் மத்திய அரசு வரி 300% உயர்வு
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரி வருவாய் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீது மத்திய அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதி துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.

கடந்த 2014-15ஆம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரோல் மீது 29,279 கோடி ரூபாயும், டீசல் மீது 42,881 கோடி ரூபாயும் கலால் வரியாக வசூலித்தது. அதேநேரம் 2020-21 நிதியாண்டில் முதல் 10 மாதங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிலிருந்து சுமார் ரூ 2.94 லட்சம் கோடியை கலால் வரியாக மத்திய அரசு வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது வசூலிக்கப்படும் கலால் வரி கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் கலால் வரியின் பங்கு 5.4% ஆக இருந்தது. தற்போது அது 12.2%ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2014-15 ஆண்டுகளில் மத்திய அரசின் கலால் வரி பெட்ரோல் மீது 9.48 ரூபாயாகவும், டீசல் பெட்ரோல் மீது 3.56 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், அது தற்போது முறையே 32.9 ரூபாயாகவும் 31.80 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் சுமார் 60% வரியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவெனக் குறைந்தது. அப்போது பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 16 ரூபாயும் உயர்த்தப்பட்டன. அதேபோல 2014 நவம்பர் முதல் 2016 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஒன்பது கட்டங்களாக பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 13.37 ரூபாயும் உயர்த்தப்பட்டன.


Click it and Unblock the Notifications
