ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டெல்லியில் 6 மாதம் 'இலவச' பங்களா ஒதுக்கீடு- மத்திய அரசு
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெறும் போது 6 மாத காலத்துக்கு டெல்லியில் அவருக்கு இலவச பங்களா ஒதுக்கீடு செய்வதற்கான அறிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 65. தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வரும் 26-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். அவரைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பொறுப்பேற்க உள்ளார். அவரும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பொறுப்பில் இருப்பார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை, தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பவர் பரிந்துரைப்பது மரபு. இந்த மரபுதான் இப்போதும் புதிய தலைமை நீதிபதி நியமனத்தில் பின்பற்றப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெறுவது என்பது மிக குறைவான வயது என தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியிருந்தார்.
அதேபோல நாட்டில் இலவசங்கள் வழங்கப்படுவது தொடர்பாகவும் விவாதம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச்தான் இந்த இலவசம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்கள் இரண்டுக்கும் வேறுபாடுகள் குறித்தும் காரசாரமாக விவாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு இன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் நாளில் இருந்து 6 மாத காலத்துக்கு டெல்லியில் வாடகை செலுத்தாத இலவச பங்களா அவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிக்கை இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. ஏழை மக்களுக்கு இலவசங்கள் வழங்குவது தொடர்பாக வழக்குகள், விசாரணைகள் என நடைபெறுகின்றன. இன்னொரு பக்கம் அரசு இத்தகைய இலவசங்களை கடன் தள்ளுபடிகளை அதிகார மையங்களுக்கும் காப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்குவது முரணாக இல்லையா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications