நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா?.. நாடு முழுவதும் மின்தடை ஏற்படுமா?.. மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இதில் பல மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை பல மடங்கு அதிகமாகி உள்ளதாலும் நிலக்கரி பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நிலக்கரி பற்றாக்குறை
நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக டெல்லி மாநில அரசு முதல்முறையாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது. டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாளைக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி விநியோகம் மேம்படவில்லை என்றால், இரண்டு நாட்களில் தலைநகர் டெல்லியில் மின்தடை ஏற்படும். அனைத்து ஆலைகளும் ஏற்கனவே மொத்த கொள்ளவில் வெறும் 55 சதவிகிதத்தில் மட்டுமே இயங்குகிறது.

டெல்லி அரசு புகார்
மத்திய அரசு ரயில்களைப் பயன்படுத்தி வேகமாக ஆலைகளுக்கு நிலக்கரி சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு கூறியது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதினார். இதேபோல் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக புகார் தெரிவித்து இருந்தது.

மத்திய அரசு விளக்கம்
நிலக்கரி பற்றாக்குறை புகார் கூறப்பட்டதால் நாடு முழுவதும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் நாட்டில் போதிய நிலக்கரி கையில் இருப்பதாகவும், மின்தடை ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது:- நாட்டில் இப்போது நான்கு நாட்கள் நிலக்கரி இருப்பு உள்ளது. இது இருப்பு மொத்தமாக முடிவடையும் என்பதை குறிக்காது.

போதுமான நிலக்கரி
இது வெறும் இருப்பு கணக்கு மட்டுமே. நாம் தொடர்ந்து நிலக்கரி சப்ளையை பெற்று வருகிறோம். நிலக்கரி சுரங்கங்கள் வெள்ளத்தில் மூழ்குவதால் வழக்கமாக மழைக்காலங்களில் நிலக்கரி எடுப்பது பாதிக்கப்படுகிறது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் நிலக்கரி தேவை அதிகமாக உள்ளது. அக்டோபரில் தேவைகள் குறையும்போது நிலக்கரி கையிருப்புகள் மீண்டும் அதிகரிக்கும். ஆகவே நம்மிடம் போதுமான நிலக்கரி உள்ளது. கெயில் நிறுவனம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை தொடர்ந்து அனுப்புவதாக கூறியுள்ளது.

தேவையில்லாமல் பீதி
நிலக்கரி இருப்பு குறித்து தேவையில்லாமல் பீதி உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு தொடர்ந்து நிலக்கரி சப்ளை கிடைக்கும். போதிய நிலக்கரி கையில் இருப்பதால் நாட்டில் மின்சார தடை ஏற்படாது. நாம் முழு நாட்டிற்கும் மின்சாரம் வழங்குகிறோம். மின்சார தடை தொடர்பாக யார் வேண்டுமானாலும் எனக்கு ஒரு கோரிக்கையை கொடுங்கள், நான் அவற்றை வழங்குவேன். நிலக்கரி விவகாரம் தொடர்பாக டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் நேற்று என்னை அழைத்தார், டெல்லியில் பற்றாக்குறை இல்லை என்று அவருக்கு உறுதியளித்தேன். நிலக்கரி தொடர்பாக டெல்லி முதல்வர் நேரடியாக என்னிடம் பேசி இருக்கலாம். இவ்வாறு அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications