தமிழ்நாட்டில் இந்த 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன .. யு.ஜி.சி ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளன என்றும் தமிழ்நாட்டை பொறுத்தவரை 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கல்வியின் நிலை என்ன? எந்தெந்த மாவட்டங்கள் கல்வியில் சிறப்பாக விளங்குகின்றன? எந்தெந்த மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளன? என்பது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

மத்திய அமைச்சர் பதில்
இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் விரிவாக கூறியதாவது:- பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு நாட்டின் கல்வி நிலை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. நாட்டின் மொத்த கல்வி விகிதம், மாணவர் சேர்க்கை விகிதம், கல்லூரிகள்- மக்கள் தொகை விகிதம் உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு நடத்தியதில் நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசம் முதலிடம்
நாட்டில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு 4-வது இடத்தில் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள்
மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் உள்பட 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

நெல்லை, கன்னியாகுமரி
கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு 4-வது இடத்தில் இருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பீகார், அசாம் மாநிலங்கள் கூட இந்த பட்டியலில் தமிகத்துக்கு பின்னாடிதான் இருக்கிறது. தென்னிந்திய ஆக்ஸ்போர்டு எனப்படும் திருநெல்வேலி, கல்வியில் எப்போதும் சிறப்புற்று விளங்கும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications