இன்னும் 2 வருடங்கள்தான்.. சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை ரெடி! நாடாளுமன்றத்தில் தெரிவித்த கட்கரி
சென்னை-சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை திட்டம் 2024ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டம் இதுவரை தொடங்கவே இல்லை என்றும் எட்டுவழி சாலைத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீடு செய்தது.
இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில் விவசாயிகளின் நிலங்களில் எல்லைக்கற்கள் நடப்பட்டன.

பொது மக்கள் போராட்டம்
5 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் ஐந்து மாவட்ட விவசாயிகள், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உள்பட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பில், தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் 1956-ன்படி தமிழக அரசு பிறப்பித்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலங்களை, எட்டு வாரங்களில் மீண்டும் உரிமையாளர்களின் பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை, எட்டு வாரங்களில் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

புதிய அரசாணை
எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் இந்த ஆண்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து ராஜ்யசபாவில் பதிலளித்து பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8,301 கிமீ நீளமுள்ள 22 பசுமை வழிச்சாலை திட்டங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

நிதின் கட்கரி தகவல்
தமிழகத்தில் சென்னை- பெங்களூரு மற்றும் சென்னை-சேலம் இடையே 2 பசுமை வழிச்சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் சென்னை- பெங்களூரு இடையே 282 கிமீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகளில் 45 கிமீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார் நிதின் கட்கரி. சென்னை- சேலம் இடையிலான 277 கிமீ நீளமுள்ள பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறிய அவர், வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications