இந்தியாவை வல்லரசாக்க ஆலோசித்த மோடி.. நிதி ஆயோக் கூட்டத்தில் 7 மாநில முதலமைச்சர்கள் “ஆப்செண்ட்”
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் 8 வது நிர்வாக குழு கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் இந்த கூட்டத்திற்கு 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அமலில் இருந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை மத்திய அரசு அமைத்தது. இந்த அமைப்பே மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. நிதி ஆயோக்கில் இருக்கும் பல்வேறு குழுக்களில் முதன்மையானதாக நிர்வாகக் குழு உள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இந்த குழுவில் உள்ளனர். இந்த நிர்வாகக் குழு கூட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8 வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் கூடியது.

2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்குவதை மையக் கருவாக கொண்டு கூடிய இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் பெண்கள் முன்னேற்றம், திறன் மேம்பாடு உள்கட்டமைப்பு, சுகாதாரம், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. உலக அளவில் 5 வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளதுடன் சா்வதேச அளவில் பல்வேறு துறைகளில் பிரபலமான நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய நிதி ஆயோக் கூட்டத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளா்ச்சியை வேகப்படுத்துவது குறித்தும், இதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும், அத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பது, முதலீட்டை அதிகரித்தல், சமூக மேம்பாடு, ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும் நிதி ஆயோக் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தை மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக முன்பே தகவல் வெளியானது. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 7 முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அர்விந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் ஆகியோர் மட்டுமின்றி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் உடல்நலக்குறைவு காரணமாக இதில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். பகவத் மான் மத்திய அரசு பஞ்சாபை புறக்கணிப்பதால் இதில் பங்கேற்கவில்லை என கூறி உள்ளார். பினராயி விஜயன், நிதீஷ் குமார் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. அதே நேரம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் அவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications