இந்தியாவை ஏமாற்றும் சீனா? முதுகில் குத்தி பழிதீர்க்கிறாரா ஜி ஜின்பிங்.. வெளியான ஷாக் தகவல்
டெல்லி: எதிரும், புதிருமாக இருந்த சீனாவையும், நம் நாட்டையும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு முறை ஒன்றாக கைகோர்க்க வைத்துள்ளது. 2020 கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பிறகு இருநாடுகள் ஒன்றாக பயணிக்க முடிவு செய்துள்ளன. நம் நாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ வந்த நிலையில் பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். இந்நிலையில் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் சீனா நம்மை ஏமாற்றுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டன. இதையடுத்து நம் நாடு சீனாவுடனான உறவை துண்டித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இருநாடுகள் இடையே சுமூக உறவு இல்லை. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்ததோடு, சீனாவையும் சீண்டி வருகிறார். இதனால் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பகையை மறந்து நம் நாடும், சீனாவும் கைகோர்த்துள்ளது.
வலுப்பெறும் இந்தியா - சீனா உறவு
கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்லாத நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அங்கு சென்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இது இந்தியா - சீனா உறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
ஜெய்சங்கரிடம் வாக்குறுதி தந்த சீனா
முன்னதாக கடந்த மாதம் 18 ம் தேதி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நம் நாட்டுக்கு வந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். எல்லை பிரச்சனையை தீர்த்து, அமைதியை கொண்டு வந்து சுமூகமான உறவை வளர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. வர்த்தகம் தொடர்பாகவும் ஜெய்சங்கர் , வாங் யீயுடன் விவாதித்தார்.
கனிமங்களை தராத சீனா
அப்போது சீனா மீண்டும் இந்தியாவுக்கு அரியவகை கனிமங்கள் மற்றும் காந்தங்களை ஏற்றுமதி செய்யும் என்று வாங் யீ உறுதியளித்தார். ஆனால் இந்த சந்திப்பு நடந்து ஒரு மாதம் நெருங்கும் நிலையில் இன்னும் சீனா நமக்கு அரிய வகை கனிமங்கள், காந்தங்களை தரவில்லை.
நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை காரணமாக அரியவகை கனிமம், காந்த ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சீனா நமக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது இன்னும் சாத்தியமாகவில்லை.
முதுகில் குத்தும் சீனா?
இதனால் நம் நாட்டில் மின்சார வாகன துறை, ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் வேறு நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறை சார் நிபுணர்கள் கூறுகையில், ‛‛சீனாவிடம் இருந்து இன்னும் அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவை வரவில்லை. இந்தியாவுக்கு அரியவகை கனிமங்கள், காந்தங்களை தருவோம் என்பதை சீனா இன்னும் உறுதியாகவும் கூறவில்லை'' என்று கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே தான் நம் நாட்டில் அதிகாரிகள் மீண்டும் சீனாவை தொடர்பு கொண்டு இதுபற்றி நியாபகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கனிமங்கள், காந்தங்கள் சார்ந்த வர்த்தகத்தை தொடங்க உறுதியளித்தார். பிரதமர் மோடியும், இதுபற்றி ஜி ஜின்பிங்கிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இப்படியான தான் சீனாவின் தாமதம் என்பது அந்த நாடு நம் நாட்டின் முதுகில் குத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கனிமங்கள் நிறைந்த சீனா
மேலும் சீனாவை எடுத்து கொண்டால் அரியவகை கனிமங்கள் நிறைந்து உள்ளன. வாகன உற்பத்தி, பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்திக்கு அரிய வகை தனிமங்கள் மிகவும் அவசியம். உலக நாடுகளின் அரியவகை தனிமங்களின் தேவையில் சுமார் 70 சதவீதத்தை சீனாவே பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக உலகம் முழுவதும் ஆட்டோமொபைல், எரிசக்தி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு தேவையான காந்தங்களில் 90 சதவீதத்தை சீனா தான் வழங்கி வருகிறது.
இதனால் தான் சீனா விவகாரத்தில் அமெரிக்கா மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால் தான் ரஷ்யாவிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி வரி விதித்த டிரம்ப் சீனாவுக்கு அதிகப்படியான வரியை விதித்தாலும் அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தயக்கம் காண்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications