சீறி பாய்ந்த அக்னி 5.. சைலெண்டாக நோட்டமிட்ட சீன கப்பல்.. வங்கக்கடலில் "உளவு" பார்க்க புது பிளான்?
டெல்லி: இந்தியா நேற்று அக்னி 5 திவ்யாஸ்திரா சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், சரியாக இந்த நேரத்தில் சீனா போர்க்கப்பல் ஒன்று சோதனை நடத்தப்பட்ட இடத்தில் சுற்றி வந்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளதாக இந்தியா அறிவித்த சில நாட்களில், சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் காணப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கப்பல் இந்தியக் கடலோரப் பகுதியின் அருகே சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிட்டுள்ளது.

மல்டிபிள் இன்டிபென்டெண்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி வெஹிக்கிள் அதாவது எம்ஐஆர்வி தொழில்நுட்பம் கொண்ட அக்னி-5 ஏவுகணையின் இந்த சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அக்னி 5: இந்த எம்ஐஆர்வி தொழில்நுட்பம் மூலம் ஒரே ஏவுகணையில் இருந்து ஆயுதங்களைப் பல திசைகளில் பல வேகத்தில் போட முடியும் என்பதே இதன் சிறப்பாகும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.. சரியாக இந்த சோதனை நடந்த போது தான் சீனா ஆராய்ச்சிக் கப்பல் அந்த பகுதியில் நோட்டமிட்டுள்ளது.
இந்தியா இந்த சோதனையை நடத்தும் போது சீனாவின் போர்க்கப்பலான சியான் யாங் ஹாங் 01 இப்போது விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து 260 கடல் மைல்கள் - அதாவது சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதே இடத்தில் தான் இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீன போர்க்கப்பல்: நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய அணுசக்தி திறன் கொண்ட K-4 ஏவுகணையை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது.. டிஆர்டிஓ வடிவமைத்த இந்த ஏவுகணை 2 டன் எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த சோதனையை முன்னிட்டு வங்காள விரிகுடா பகுதியில் மார்ச் 11 மற்றும் 16 வரை எந்த விமானமும் பறக்கக்கூடாது என்று இந்தியா எச்சரித்து இருந்தது. சுமார் 3,500 கிலோமீட்டர்கள் வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சரியாக இந்த நேரத்தில் தான் இந்தியாவின் செயல்பாடுகளைச் சீனா கண்காணித்து வருகிறது. 4,813 டன் எடையுள்ள ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 01 அங்கே வந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது பலருக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது.
ரூட் என்ன: அதாவது சீனாவின் இந்தப் போர்க்கப்பல் கடந்த மார்ச் 6ஆம் தேதி மலாக்கா ஜலசந்தியில் நுழைந்தது.. இது மார்ச் 8ஆம் தேதி நிக்கோபார் தீவுக்கும் இந்தியத் தீபகற்பத்திற்கும் இடையில் காணப்பட்டது. பின்னர் 3 நாட்களில் மெல்ல அப்படியே வங்காள விரிகுடாவில் சோதனை செய்யும் இடத்திற்கு அருகே வந்துள்ளது. சீனாவின் இந்த ஆராய்ச்சி கப்பல் 100 மீட்டர் நீளம் கொண்டது. இதனால் ஒரே நேரத்தில் 15,000 கடல் மைல் தூரம் செல்ல முடியும். 10,000 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யக்கூடிய ரிமோட் சென்சிங் கருவிகளை இந்த சீன ஆய்வு கப்பல் கொண்டுள்ளது.
இந்த கப்பலில் அதிநவீன ஒலியைக் கண்டறியும் சென்சார்கள் இருக்கிறது. அதாவது நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்படுத்தும் சிறு ஒலியைக் கூட இது உணரலாம். மேலும் இது நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒலியியல் தடம் மற்றும் நீருக்கடியில் ஏவுகணை லான்ச் உள்ளிட்டவற்றையும் கண்டறியும் திறன் கொண்டது. இது உளவுத் தகவலாகும் பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.












Click it and Unblock the Notifications