ராகுல் காந்தியை நெருங்கி வந்த விஜய்.. அப்படியே அவர் பிளான் போட்ட படியே நடக்குதே! பிரதமர் டார்கெட்!
டெல்லி: 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தவெக தலைவர் விஜய் தேசிய அரசியல் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து நடத்திய ஆகஸ்ட் 2026 மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற பட்டியலில் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

முக்கிய தலைவர்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே விஜய் இந்த இடத்தைப் பிடித்திருப்பது, எதிர்காலத்தில் ராகுல் காந்தியின் முதன்மை எதிர்க்கட்சி தலைவர் இடத்திற்கே நேரடி சவாலாக மாறுமா என்ற விவாதத்தை டெல்லி அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.
கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். எனினும், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு இருந்த 55 சதவீத ஆதரவு தற்போது 48.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மோடியின் செல்வாக்கு 50 சதவீதத்திற்கு கீழ் குறைவது 2024 ஆகஸ்ட்டிற்குப் பிறகு இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
அதே சமயம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். கடந்த ஜனவரியில் அவருக்கு 27 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில், பெரிய அளவிலான வளர்ச்சி எதுவும் இன்றி அவரது வாக்கு வங்கி அப்படியே தேங்கி நிற்கிறது.
மூன்றாவது இடத்தில் விஜய் மாஸ் என்ட்ரி!
இந்தக் கருத்துக்கணிப்பில் மிக முக்கியமான ஹைலைட்டாக அமைந்தது தமிழக முதலமைச்சர் விஜய்யின் வருகைதான். தேசிய அளவிலான பிரதமர் விருப்பப் பட்டியலில் 9.2 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று விஜய் நேரடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பல மூத்த தேசியத் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஜய் இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், நிர்வாகத்தில் காட்டும் வேகம், தவறுகளைத் திருத்திக்கொள்ளும் அணுகுமுறை மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை தேசிய அளவில் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
ராகுல் காந்தியின் இடத்திற்கு சவாலா?
கடந்த சில ஆண்டுகளாக மோடிக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்டு வரும் ராகுல் காந்தியின் செல்வாக்கு 27 சதவீத அளவிலேயே தேங்கி நிற்கும் நிலையில், தேசிய அரசியலில் இப்போதுதான் காலடி எடுத்து வைக்கும் விஜய் உடனடியாக 9.2 சதவீத ஆதரவைப் பெற்றிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றுத் தலைமை யார் என்ற கேள்வி எழும்போது, ராகுல் காந்தியின் இடத்தை நோக்கி விஜய் வேகமாக முன்னேறி வருவதாக அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, வட மாநிலங்களிலும் விஜய்யை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் பி.ஆர் திட்டங்கள் மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் ஆதரவு கூடும் பட்சத்தில், இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய திட்டத்திற்கு கிடைத்த பூஸ்ட்!
கட்சியை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றி, 2029-ல் 100 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி தேவகவுடா பாணியில் தேசிய அளவில் களம் காண தவெக தீட்டியிருந்த திட்டத்திற்கு, இந்த 'மூட் ஆஃப் தி நேஷன்' ஆய்வு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
சினிமாவில் மட்டுமின்றி, தேசிய அரசியல் களத்திலும் விஜய் கொடுத்துள்ள இந்த அதிரடி என்ட்ரி, வரும் காலங்களில் டெல்லி அரசியலின் சமன்பாடுகளை மாற்றி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
