அங்கிட்டு மமதா வெளுக்க இங்கிட்டு குலாம் நபி ஆசாத் போட்டு தாக்க.. எவ்வளவு அடியைத்தான் தாங்கும் காங்.?
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 300 எம்.பிக்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ, நாங்கள் இல்லாமல் எந்த ஒரு அணியும் எதையும் சாதிக்க முடியாது என்கின்றனர்.
அத்துடன் மமதா பானர்ஜியை பாஜகவின் பி டீம் என முத்திரை குத்துவதிலும் தீவிரமாக இருக்கின்றனர். மமதா பானர்ஜி கள யதார்த்தத்தில் பேசுகிறார்; காங்கிரஸோ இன்னமும் பெரிய கட்சி நினைப்பில் பேசிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
40 ஆண்டுகால காங். ரகசியங்கள்...கூட்டணியில் கலகம் மூட்ட வருகிறது குலாம்நபி ஆசாத்தின் புதிய புத்தகம்!

காங். வெல்ல முடியாது
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற காங். நிர்வாகிகள் கூட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை. 300 எம்.பிக்களைப் பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நான் நினைக்கவில்லை.

370வது பிரிவு வழக்கு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல முறை பேசி இருக்கிறேன். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. என் கையில் எதுவுமே இல்லை. ஜம்மு காஷ்மீர் முதல்வர் வேட்பாளர் என்பதெல்லாம் இப்போது அர்த்தமற்றது. நமது நிலத்தையும் வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்பதுதான் மிக முக்கியம். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எப்போது தீர்ப்பு வழங்கும் எனவும் தெரியவில்லை. அதற்காக ஜம்மு காஷ்மீர் மக்களின் நிலமும் வேலைவாய்ப்பும் வெளிமாநிலத்தவர் வசமாக அனுமதிக்க முடியாது.

தேர்தல் நடத்த கோரிக்கை
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

கலகக் குரல் குலாம் நபி ஆசாத்
370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அம்மாநில முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். இதனால் காங்கிரஸில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி மீண்டும் வழங்கப்படவும் இல்லை. ராஜ்யசபாவில் இருந்து குலாம்நபி ஆசாத் ஓய்வு பெற்ற போது காங்கிரசார் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்துக்கு புகழாரம் சூட்டி உருக்கமாக பேசியிருந்தார். இதனால் பாஜக பக்கம் குலாம்நபி ஆசாத் தாவக் கூடும் என்கிற பேச்சுகள் நீண்டகாலமாக இருந்து வருகிறது.