ட்விஸ்ட் கொடுத்த காங்கிரஸ்.. ஜனாதிபதி வேட்பாளர் குறித்த மம்தாவின் கூட்டத்தில் பங்கேற்க முடிவு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக மம்தா பானர்ஜி நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

பாஜக தீவிரம்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசுத் தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.

காங்கிரஸ், திமுக
பாஜக அளவுக்கு காங்கிரஸ் கட்சி இன்னும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முழுமையாக தயாராகவில்லை. அமலாக்கத்துறை விசாரணை, உட்கட்சிப் பூசல் போன்றவற்றால் அக்கட்சி இதில் முழு கவனம் செலுத்தவில்லை என தெரிகிறது. அதே சமயம் இதுகுறித்து டெல்லியில் 15 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.

மம்தா அழைப்பு
இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அவரும் தனது கடிதத்தில் ஜூன் 15 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.

இடதுசாரிகள் எதிர்ப்பு
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான மம்தா பானர்ஜியின் இந்த முயற்சிக்கு ஒருபக்கம் வரவேற்பு இருந்தாலும், எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "மம்தா பானர்ஜி இடம், தேதி, நேரம் குறித்து எதையும் கலந்துரையாடாமல் ஒருதலைபட்சமாக கடிதம் எழுதி இருக்கிறார்." என குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் பங்கேற்கும்
இதேபோல் காங்கிரஸுடன் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து இருக்கும் அம்மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சியும் மம்தா அழைத்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ள மாட்டார் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் தங்கள் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications