வெளிநாடு போகும் எம்.பிக்கள் குழு! காங். நிராகரித்த சசி தரூரை டிக் செய்த மத்திய அரசு.. என்ன நடந்தது?
டெல்லி: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்தும் விதமாக மத்திய அரசு, வெளிநாடு செல்ல 7 எம்பிக்கள் குழுவை தயார் செய்துள்ளது. சசி தரூர் உள்பட 7 எம்பிக்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்கள் யாரையும் தேர்ந்தெடுக்காமல் காங்கிரஸ் எம்பி சசி தரூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இது ஏன்? இதற்கு பின்னால் உள்ள காரணங்களை இங்கு பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காமில், கடந்த மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. பாகிஸ்தானின் 10 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தது.

7 எம்பிக்கள் குழு
இதற்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடியை கொடுத்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இதையடுத்து, கடந்த 10 ஆம் தேதி, இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்த ராஜ்யரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க இந்தியா முடிவு செய்து இருக்கிறது. அதன்படி, பல்வேறு வெளிநாடுகளுக்கு முக்கிய கட்சிகளின் எம்பிக்கள் அடங்கிய குழுக்களை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. சசி தரூர் உள்பட 7 எம்பிக்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர்
காங்கிரஸ் எம்பி சசி தரூர் தவிர, ரவி சங்கர் பிரசாத் (பாஜக), சஞச்ய் குகார் ஷா (ஐக்கிய ஜனதா தளம்), பைஜயந்த் பண்டா (பாஜக), கனிமொழி கருணாநிதி (பாஜக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) என 7 பேர் வெளிநாடுகளுக்கு சென்று பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களை அம்பலப்படுத்தும் எம்பிக்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக, வெளிநாடு செல்லும் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற பரிந்துரைக்கும் எம்பிக்களின் பெயரை கட்சி வாரியாக மத்திய அரசு கேட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 4 எம்பிக்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனந்த் ஷர்மா, கவுரவ் கோகாய், சையது நசீஸ் ஹூசைன், ராஜ் ப்ரார் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆனால் இவர்களில் யாரையும் தேர்வு செய்யாமல் சசிதரூர் பெயரை டிக் அடித்துள்ளது மத்திய அரசு.
என்ன காரணம்?
சசிதரூரை பொறுத்தவரை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். வெளியுறவு துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இதனால் வெளியுறவுத் துறையில் இவரது அனுபவம் கைகொடுக்கும் என்று மத்திய அரசு நினைத்து இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் மற்றொரு பக்கம் அரசியல் ரீதியாகவும் இதில் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது, சசி தரூருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே சமீப காலமாக அவ்வளவு நல்லுறவு இல்லை.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை சசி தரூர் புகழ்ந்து பேசி வருகிறார். இதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் தான், சசி தரூர் தலைமையில் எம்பிக்கள் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் குழுவில் இடம் பெற்று இருப்பது பற்றி சசி தரூர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
கார்கேவை எதிர்த்து நின்றவர்
"எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பெருமை அளிக்கிறது. தேசிய நலன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் நான் எந்த குறைகளையும் காண மாட்டேன்" என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமைக்கும் சசி தரூருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே உரசல் போக்கே நீடித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு ஆதரவாக கட்டுரை ஒன்று எழுதியதால் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பு சசி தரூரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். ஜி 23 என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது. இதில், ஒருவராக சசி தரூர் இடம் பெற்று இருந்தர். அதேபோல, 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலி கார்கேவை எதிர்த்து சசி தரூர் போட்டியிட்டார். மல்லிகார்ஜுன கார்கேவிற்கு சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவு இருந்த போதிலும் ஆயிரம் ஓட்டுக்களை சசி தரூர் பெற்றார்.












Click it and Unblock the Notifications