உச்சநீதிமன்றம் நிபந்தனைகளால்தான் ராஜினாமா நாடகமாடும் கெஜ்ரிவால்..விளாசும் காங்கிரஸ், பாஜக, ஜேடியூ!
டெல்லி: உச்சநீதிமன்றம் விதித்த கடுமையான நிபந்தனைகளால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுவதாக காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்தியாவிலேயே முதல்வர் இருக்கையில் அமருவதற்கு எச்சரிக்கை விடுத்து ஜாமீன் வழங்கப்பட்டவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் அந்த கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுதலையான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரிடையே உரையாற்றினார்.

அப்போது, ஆம் ஆத்மி கட்சியை உடைத்து டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக கனவு கண்டது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முடியவில்லை. அதனால் என்னுடைய தைரியத்தைத் தகர்க்க என்னை சிறைக்கு அனுப்பினர். ஆங்கிலேயர் ஆட்சியைவிட கொடூரமான பாஜக ஆட்சி. அடுத்த 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். டெல்லி சட்டசபைக்கு முன்கூட்டியே நவம்பரில் மகாராஷ்டிரா மாநில சட்டசபையுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும். டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறாமல் போனால் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவர். மக்களிடம் சென்று மக்களின் தீர்ப்பைப் பெற்றுதான் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித், அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுகிறார். உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனால் அவரால் முதல்வர் இருக்கையில் அமரவோ, கோப்புகளில் கையெழுத்திடவோ முடியாது. இதனால்தான் ராஜினாமா செய்வதாக அறிவிக்கிறார் என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நீரஜ்குமாரும் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நீரஜ்குமார் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனால்தான் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றார்.
பாஜக தலைவர்கள் பலரும் இது கெஜ்ரிவாலின் விளம்பர ஸ்டண்ட் என விமர்சித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ஆம் ஆத்மி கட்சி ஒரு ஊழல் கட்சி என நாடு அறிந்துள்ளது. இழந்து விட்ட செல்வாக்கை பெற ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்கிறது. இதனால்தான் முதல்வர் பதவி ராஜினாமா நாடகம் நடக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications