தேர்தல் ஆணையத்துடன் பிரதமர் அலுவலகம் ரகசிய மீட்டிங்? பூனைக்குட்டி வெளியே வந்தாச்சு.. காங்., ஆவேசம்
தேர்தல் ஆணையத்துடன் பிரதமர் அலுவலகம் கூட்டம் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது
டெல்லி: இதுவரை இல்லாத வகையில் ஒரு பரபரப்பு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.. தலைமை தேர்தல் ஆணையர் உட்பட 3 ஆணையர்களுடன் பிரதமரின் அலுவலகம் ஒரு அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருக்கிறது.. இது சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானதும்கூட.. இதைதான் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளன.. இது தொடர்பாக, வரும் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் தாக்கல் செய்ய போவதாக மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு பொறுப்புக்கு வந்ததில் இருந்தே ஒரு முக்கிய குற்றச்சாட்டு உள்ளது.. அதாவது அரசு இயந்திரங்களை, பாஜக அதிகாரத்தை காட்டி ஆட்டிப்படைப்பதாக எதிர்க்கட்சிகளால் கூறப்பட்டு வருகிறது...
அதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பான தேர்தல் ஆணையத்தை கூட, பாஜக அரசு விட்டு வைப்பதில்லை, அங்கும் நுழைந்து அவர்களையும் கைக்குள் போட்டு கொள்கிறது என்ற பேச்சு இருந்து வருகிறது.

அரசியல்
இவ்வளவு காலமாக இப்படி ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வரும் நிலையில், அது எதிர்க்கட்சிகள் அவிழ்த்துவிடும் வழக்கமான அரசியல் என்றே கருதப்பட்டது. இப்போது அப்படி இல்லை, இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரதமர் அலுவலகத்துடன் தேர்தல் ஆணையர்கள் ரகசிய கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்... இதுவரை இந்திய வரலாற்றிலேயே இப்படி யாருமே செய்ததில்லை.. இதுதான் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ்
இது தொடர்பான செய்தியும் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.. காரணம், விரைவில் 5 மாநில தேர்தல் நடக்க போகிறது.. இந்த தேர்தல் காங்கிரசுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாஜகவுக்கும் முக்கியம்.. நாளுக்கு நாள் செல்வாக்கை பாஜக இழந்து வருவதாக நடந்து முடிந்த வடமாநில தேர்தல் முடிவுகளும் சொல்லி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த நவம்பர் 16ம் தேதி வீடியோ கான்பரன்சில் ரகசிய கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

அதிகாரிகள்
தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனூப் சந்திர பாண்டே ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிகே மிஸ்ரா தலைமை தாங்கினாராம்.. இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தில் யாருமே தலையிடுவதில்லை.. தேர்தல் நடத்துவது, தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் அதிகாரிகள்தான் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு கொள்வார்கள்..

பாதுகாப்பு
பாதுகாப்பு தொடர்பாக வேண்டுமானால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்துவார்கள்.. அவ்வளவுதான்.. மற்றபடி பிரதமர் அலுவலகத்துக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் சம்பந்தமே கிடையாது.. அதனால்தான் இந்த ரகசிய கூட்டம் சில சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் சீர்த்திருத்தங்களில் ஏதோ சந்தேகங்கள் இருந்ததாகவும், அதை பற்றி ஆலோசிக்கவே இந்த அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நடத்தப்பட்டதாகவும், மாநில தேர்தல்கள் தொடர்பாக எதுவும் பேசவில்லை, இதில் முறைகேடு ஏதுமில்லை என்றும் அரசுக்கு விளக்கம் தரப்பட்டதாக தெரிகிறது..

நோட்டீஸ்
எனினும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விடவில்லை.. கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. "பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது... தேர்தல் ஆணையத்தை தனது துணை அமைப்பாக நடத்தும் மோடி அரசு, அரசாங்க அமைப்புகளை அழிப்பதில் இன்னும் ஒருபடி கீழிறங்கி விட்டது" என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்துடனான தேர்தல் ஆணையத்தின் வழக்கமில்லாத சந்திப்பு பற்றி மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி சார்பில் நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டது..

அவை
அதில் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான அதிகாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.. ஆனால் அதற்குள் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக அவையில் அமளி நிலவியதால், அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.. அதனால், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை, வரும் திங்கட்கிழமை அவையில் தாக்கல் செய்ய போவதாக மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்... எப்படியும் காங்கிரஸ் இந்த விஷயத்தை லேசில் விட்டுவிடாது என்றே தெரிகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications