கொரோனாவை எதிர்கொள்ள அவசர நிதி.. இந்தியா ரூ. 74 கோடி வழங்க முடிவு.. சார்க் ஆலோசனையில் மோடி அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்காக அவசர நிதியை நாம் திரட்ட வேண்டும், இந்தியா இதற்காக முதல் நாடாக 74 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கொரோனா சிகிச்சைக்காக அவசர நிதியை நாம் திரட்ட வேண்டும், இந்தியா இதற்காக முதல் நாடாக 74 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து சார்க் நாடுகளின் கூட்டமைப்பு இன்று ஆலோசனை நடத்தியது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபால், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா குறித்து ஆலோசனை செய்தது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த நாடுகள் ஆலோசனை செய்தது.
பிரதமர் மோடிதான் இந்த ஆலோசனைக்கு அழைப்பு விடுத்து இருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கொரோனா குறித்து இதில் முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது .

குழு
இதில் பேசிய பிரதமர் மோடி, இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வதற்காக ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் எனப்படும் துரிதமாக செயல்படும் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், போலீசார் பலர் இடம்பெற்று இருக்கிறார்கள். இவர்களிடம் போதிய மருத்துவ சாதனங்கள், ஆராய்ச்சி கருவிகள், மருந்துகள் உள்ளது. அவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.

சார்க் குழு
இவர்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, சார்க் குழுவின் மற்ற நாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறார்கள். மற்ற நாடுகளுக்கும் இந்த குழுவை அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் நம்மை தயார் படுத்த வேண்டும். இந்த வைரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த வைரஸை நாம் எப்படியாவது வெற்றிகொள்ள வேண்டும். இதற்காக நாம் இணைந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

அவசர நிதி
கொரோனா சிகிச்சைக்காக அவசர நிதியை நாம் திரட்ட வேண்டும்.இந்தியா இதற்கான நிதியை முதல் நாடாக அளிக்கும். இந்தியா 74 கோடி ரூபாய் இதற்காக அளிக்க முடிவு செய்துள்ளது. சார்க் நாடுகள் தாமாக முன் வந்து இந்த நிதி உதவியை அளிக்கலாம். அவசர நேரத்தில் இந்த நிதி கண்டிப்பாக மற்ற நாடுகளுக்கு உதவும், என்று சார்க் நாடுகளின் ஆலோசனையின் பிரதமர் மோடி அறிவித்துள்ளார் .

பெரிய வரவேற்பு
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சார்க் நாடுகளை பிரதமர் மோடி ஆலோசனைக்கு அழைத்த போதே அது பெரிய நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. சார்க் நாடுகளை ஒன்று சேர்த்தால் தெற்காசியாவில் கொரோனாவை தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை பிரதமர் மோடி எடுத்ததோடு, அதற்காக அவசர நிதியை ஒதுக்கியதும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications