கொரோனா வைரஸ்.. டெல்லியில் மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை
டெல்லி: டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நோயாளி ஒருவர் மருத்துவமனையில் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையங்களில் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். அப்படி நடத்தப்படும் பரிசோதனையின் போது, கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறார்கள். முடிவில் அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிந்தால் மேலும் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 35 வயது இளைஞர் ஒருவரை சோதனையில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தங்கியிருந்தார். அவர் நேற்று மாலை ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி திரும்பினார்.
அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கிரீன் டெஸ்டில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு 9 மணியளவில் அவரை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று இரவு தனிமை வார்டில் இருந்ததால், மனஉளைச்சலில் இருந்த அவர் திடீரென மருத்துவமனயில் 7வது மாடியில் இருந்து நேற்று இரவு குதித்து தற்கொலை செய்து கொண்டார். . இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். டெல்லியில் இதுவரை 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 169 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications