"ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு.." அடுத்த 15 வருடங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி செலவாகுமாம்! வந்த புது தகவல்
டெல்லி: லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அதற்குத் தேர்தல் ஆணையம் என்ன செய்ய வேண்டும்.. அதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு எந்தளவுக்குச் செலவாகும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் அதற்கு தேவையான புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வாங்க வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்: இதற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் தேவைப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசிடம் இது குறித்துத் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஆயுள் 15 ஆண்டுகளாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், ஒரு செட் இயந்திரத்தைப் பயன்படுத்தி மூன்று தேர்தல்களை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு செட் தேவைப்படும்: இன்னும் சில மாதங்களில் நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்காக 11.8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிகிறது. மேலும், ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடந்தால் ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு செட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். ஒன்று மக்களவைத் தொகுதிக்கும் மற்றொன்று சட்டமன்றத் தொகுதிக்கும் இருக்கும்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை ரிசர்வ் இயந்திரங்களாக வைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையான குறைந்தபட்சம் 46,75,100 பேலட் யூனிட்கள், 33,63,300 கண்ட்ரோல் யூனிட்கள்,, 36,62,600 விவிபேட்கள் தேவைப்படும்.
செலவு எவ்வளவு: 2023ஆம் ஆண்டு சந்தை மதிப்பை வைத்துப் பார்க்கும் போகு பேலட் யூனிட் ஒன்றின் விலை ரூ. 7,900 ஆகவும், கண்டிரோல் யூனிட் ஒன்றின் விலை ₹ 9,800 ஆகவும், விவிபேட் யூனிட்டுக்கு ₹ 16,000 ஆகவும் இருந்தது. இதையெல்லாம் வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அடுத்த 15 ஆண்டுகளுக்குத் தேர்தலை நடத்த 10 ஆயிரம் கோடி செலவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடக் கூடுதல் ராணுவம், போலீசார், வாகனங்கள் தேவை என்பதையும் தேர்தல் ஆணையம் அடிக்கோடிட்டுக் காட்டியது. இப்படி தேவையான இயந்திரங்களை வாங்குவது, சேமிப்பை அதிகரிப்பது, என அனைத்தையும் செய்தாலும் கூட ஒரே நேரத்தில் முதல் தேர்தலைக் குறைந்தபட்சம் 2029இல் மட்டுமே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டத் திருத்தங்கள்: மேலும், ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டத்தின் ஐந்து பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படுகிறது. சட்டப்பிரிவு 83, நாடாளுமன்றத்தின் அவைகளின் காலம் தொடர்பான சட்டப்பிரிவு 85, சட்டப்பிரிவு 172, மாநில சட்டமன்றங்களின் காலம் தொடர்பான பிரிவு 172, கலைப்பு தொடர்பான விதி 174 ஆகிய சட்டத் திருத்தங்கள் தேவைப்படும்.
மேலும், கட்சித் தாவல் காரணமாகத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையிலும் மாற்றங்கள் தேவைப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications